கூத்தாடிகள்! -இந்துமகேஷ்

கலையுணர்வு இல்லாதார் வாழ்வு
கவலைக்கிடமானது!
இரசனையது இல்லையெனில்
இவ்வாழ்வில் இன்பமெது?
உண்ணும் உணவு, உறையுள்,
கண்ணுறங்கும் படுக்கை –
இவையெல்லாம்
கலையுணர்வு இல்லாதான் கண்களுக்கு
வெறும் பொருளே!

நாவின் ருசியும்,நயந்துரைக்கும்
வாயின் மொழியும், விழிகளுக்குள்
வீழுகின்ற அழகுகளும், மெல்லிசையாய்
காதுகளில் தேன்பாய்ச்சும்
தாய்மொழியும் என்று
மிகுந்திருக்கும் இன்பமெல்லாம்
இரசனையது இல்லார்க்கு
எவ்விதத்தில் பயனளிக்கும்?

நவரசமும் நம்வாழ்வில்
நாளும் பயில்கின்றோம்!
அழுதல், சிரித்தல், அருவருத்தல்,
வியத்தல், வெகுளல், பயம்கொள்ளல்,
மகிழ்தல், பெருமையுறல், சாந்தம் என
நவரசங்களோடேதான்
நம்வாழ்வு நகர்கிறது!

வாழ்வின் இரசனைகளை
வகைப்படுத்தும் கலைஞர்தமை
„கூத்தாடிகள்“ என்று
குறுக்குவது முறைதானா?

கூத்தாடும் கலைஞனெனக்
கோலமது கொண்ட சிவன்
ஆட்டுவிக்க நாம் ஆடும்
வாழ்க்கை இது நாடகமே!

நாடகமே வாழ்க்கை என்று
நன்குணர்ந்த மனிதர்களே
ஆடுகின்றார் வாழ்க்கைதனை
அழகாக!

வீடுகளில் காண்பதையே
வீதிகளில் மேடைகளில்
அரங்குகளில் என்று
ஆடுகின்ற கலைஞரெல்லாம்
எங்கள் மறுவடிவம்
என்பதனை மறக்காதீர்!
கூத்தாடிகள் என்று
கொச்சைப் படுத்தாதீர்!

ஆய கலைகள்
அறுபத்தி நான்கினையும்
ஏய உணர்விக்கும்
என்னம்மை கலைவாணி
அருளட்டும் எங்கள்
அகக்கண் திறப்பதற்கே!