ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் வந்து போகிறது. சர்வ தேசங்களிலும் மகளிருக்கான வலிகளும் நீள்கிறது. அவ்வலிகளைப் பேசும் ஒரு நூல். சமநேரத்தில் பெண்கள் பாடசாலை ஒன்றின் பெண் சாதனையாளர்களுக்கான கெளரவிப்பு. 2019 சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு ஒரு நிகழ்வு.
ஈழத்து இலக்கியத்தில் தனக்கான ஒரு பக்கத்தினைக் கொண்டிருக்கும் கவிஞர் நெடுந்தீவு முகிலன் அவர்களின் பன்னிரண்டாவது நூலாகிய ‚வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை‘ கவிதை நூல் வெளியீட்டு விழாவும், கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியின் பெண் சாதனையாளர்கள் கெளரவிப்பு நிகழ்வும், 01.03.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 01.00 மணிக்கு ஈழத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள புனித திரேசா பெண்கள் கல்லூரியில் ஆரம்பமானது. நிகழ்விற்கு முன்னாள் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளரும் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், புனித திரேசா பெண்கள் கல்லூரியின் பழைய மாணவருமாகிய த.குருகுலராசா தலைமை வகித்தார்.
பிரதம அதிதியாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர்
ஜோன் குயின்ரஸ் பங்கேற்றார். நிகழ்வினை சுவிட்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலை மற்றும் வள்ளுவர்புரம் செல்லமுத்து வெளியீட்டகம் என்பன ஒழுங்கு செய்திருந்தன. நூல் வெளியீடு: செல்லமுத்து வெளியீட்டகம்.
முன்னதாக நிகழ்வின் பங்கேற்பாளர்களுக்கான வரவேற்பு இடம்பெற்றது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து இறைவணக்கம், தமிழ்மொழி வாழ்த்து என்பவற்றை கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவிகள் வழங்கினர். வரவேற்புரையினை புளியம்பொக்கணையைச் சேர்ந்த ‚நினைவுகளின் நினைவோடு‘ நூலின் ஆசிரியர் வேல்மகள் வழங்கினார். வாழ்த்துரையினை கிளிநொச்சி மத்திய கல்லூரி ஆசிரியர் அருணாசலம் சத்தியநாதன் வழங்கினார். தலைமையுரையினைத் தொடர்ந்து பெண் சாதனையாளர்கள் சார்பில் இலங்கை ரியூப் தமிழ் பணிப்பாளரும், மரதொண் ஓட்டம் மற்றும் 5000மீ, 1000மீ, 10000மீ ஓட்டப் போட்டிகளில் தேசிய சாதனையாளராக அறியப்பட்டவருமான டிவனியா முகுந்தன் வழங்கினார். அறிமுகவுரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார்.
நூலினை கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி அதிபர் அன்ரனி சாந்தா மரியநாயகம் வெளியிட்டு வைக்க, முதற்பிரதியினை கிருபா லேணர்ஸ் அதிபர் ‚சமூக திலகம்‘ தொழிலதிபர் அ.கிருபாகரன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்ப்ட்டன. தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றோர்கள் நூல்களைப் பெற்றுக்கொண்டனர். பிரதம அதிதி உரையினைத் தொடர்ந்து நூலின் ஆய்வுரையினை ‚சுவாசம் மட்டுமே சுடுகலனாய்‘ நூலின் ஆசிரியர் வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா ஆற்றினார். தொடர்ந்து கிளிநொச்சி புனித திரேசா மகளிர் கல்லூரியின் எட்டு பெண் சாதனையாளர்கள் கெளரவிப்பு செய்யப்பட்டனர். அவர்களின் பெயர்களாவன:
1. திருமதி விஜயராணி சதீஸ்குமார், சட்டத்தரணி.
2. திருமதி விக்ரர் சாந்தி, எழுத்தாளர்/பெண் அரசியலாளர்.
3. செல்வி.சரவணமுத்து சந்திரவதனி, பாடசாலை முதல்வர்.
4. செல்வி விஜேந்திரா விஜயதர்சினி, பொறியியலாளர்.
5. செல்வி ஆரணி விக்னேஸ்வரநாதன், பொறியியலாளர்.
6. திருமதி டிவனியா முகுந்தன், தேசிய சாதனையாளர். (மரதொண் ஓட்டப்போட்டி மற்றும் 1000m, 1500m, 5000m ஓட்டப்போட்டி)
7. செல்வி. ஜெகதீஸ்வரன் மகிழினி, உயர்தரப் பரீட்சை சாதனையாளர்(2018 கணிதப் பிரிவு, மாவட்டத்தில் முதலிடம்)
8. செல்வி. கந்தசாமி டிலக்சியா, உயர்தரப் பரீட்சை சாதனையாளர் (2016 வர்த்தகப்பிரிவு, மாவட்டத்தில் முதலிடம்)
உயரதரப் பரீட்சை சாதனையாளர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. இப்பரிசினை பரந்தன் ரி.கே.டெக்ஸ் உரிமையாளர் இ.தசாகரன் வழங்கினார். விளையாட்டு சாதனையாளருக்கான விசேட பரிசினை விளையாட்டுக் கழகத்தினர் வழங்கி வைத்தனர்.
நிகழ்வில் நூலாசிரியர் நெடுந்தீவு முகிலன் அவர்களின் தாயார் விஸ்வலிங்கம் அன்னலட்சுமி அவர்களும் கெளரவிக்கப்பட்டார். ஏற்புரையினை கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினரும், கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியின் பழய மாணவியுமான விக்ரர் சாந்தி வழங்கினார். நன்றியுரையினை கவிஞர் சாந்தனூர் அப்பன் வழங்கினார்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கவிஞர் ஈழபாரதி(பிரான்ஸ்) அவர்களும், கெளரவ அதிதிகளாக, கலைவாணி செளந்தரராஜன்( பிரதேச சபை உறுப்பினர், கரைச்சி), வற்சலா துரைசிங்கம்(மனித உரிமைகள் செயற்பாட்டாளர், யாழ் மாவட்டம்), கலாபூஷணம் திரு. வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை, கவிஞர் காவலூர் அகிலன்(ஆசிரியர், ‚மீளும் நினைவுகள்‘ கவிநூல்), கவிஞர் தே.பிரியன்(பன்னங்கண்டி), கவிஞர் வட்டக்கச்சி வினோத் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்ச்சித் தொகுப்பு: கவிஞர் யாழ் சபேசன், நெடுந்தீவு.
ஜேர்மனியில் வாழும் நெடுந்தீவு முகிலன் அவர்கள் ஏற்கனவே 11 நூல்களையும், குறும்படங்களையும் வெளியிட்டவர். சர்வதேச மகளிர் தினத்தினையொடி இடம்பெற்ற இந்நிகழ்வில் பெண் சாதனையாளர்கள் கெளரவிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.