மழை மேக குளிர்மை,
விடிந்தும் விடியாத இருட்டு
கண்ணைப்பறிக்கும்
மின்னலின் செறிவு
செவிடாக்க துடிக்கும்
முழக்கத்தின் சத்தம்
எல்லாம் சேர்ந்து
அதிகால நேரத்தில்
என் உடலைத் தொட்டு
தழுவி மகிழ்கின்றன
உடல் சமநிலையில்
தடுமாற்றம் வருகிறது
போர்வைக்குள் முடங்க
எழுந்த எண்ணத்திற்கு
பெரும் ஏமாற்றம் எழுகிறது
விழிகள் மூட மறுத்து
திறந்து கொள்கிறன
கைகள் உயர எழுந்து
முதற் பார்வைக்கு
விருந்தாகிறது
சோம்பல் தொலைக்க
உடல் வளைந்து நிமிர்கிறது
எனைத் தாங்கி நிற்கும்
இரும்பு கட்டிலுக்கு
விடுதலை கொடுக்கிறேன்
சில நிமிடங்கள் தண்ணீரின்
சலசலப்புக்கள்
புது நாளை வரவேற்கும்
உற்சாக அரங்கேற்றம்
கையில் குவளை தேநீரோடு
சாளரத்து ஓரம்
வந்து அமர்கிறேன்
வடக்கில் இருந்து
எங்கோ செல்கிறது
கரு நிறத்து முகில் கூட்டம்
சாரளத்தில் கோடு
போடுகின்றன சாரலின் துளிகள்
கரு பஞ்சுப் பொதிகளை
வெட்டி துண்டித்து
வெளி வர துடிக்கின்றன
சூரியனின் கதிர்கள்
அங்காங்கே பூக்களை
பறிகொடுத்த மரங்கள்
சோகத்தில் அசைகின்றன
எங்கும் மகிழ்ச்சி இல்லை
ஆடி அடங்கிய புயலின்
முடிவுகள் மரங்களை
வாழ விடவில்லை
அருகில் நின்ற
அப்பிள் மரத்தை
உற்றுப் பார்க்கிறேன்
ஒன்றைக் குருவி
வீசிய மெல்லிய காற்றின்
குளிர் தாங்க முடியாது
நடுங்கிக் கொண்டிருக்கிறது
துணையை இரவு வீசிய
புயல் பறித்திருக்கலாம்
அருகில் அதன் கூடு
சிதைந்திருந்தது
அதன் குஞ்சுகள் கூட
அதற்குள் வாழ்ந்து
இரவின் இருட்டில் இறந்திருக்கலாம்
அழுது சிவந்த கண்ணோடு
கூட்டை பார்ப்பதும்
சுற்றிச்சுற்றி வெளியை பார்ப்பதுமாக
குருவி நடுங்கி கொண்டிருக்கிறது
காரிருளில் காணமால் போன
துணையை தேடலாம்
சிதைந்த கூட்டில் விழுந்து போன
தன் தலைமுறையை தேடலாம்
தொலைந்து போன தன்னுடைய
வாழ்க்கையை தேடலாம்
எதை என்று
என்னால் அடையாளம்
காண முடியாத தேடல்
அதன் கண்களில் இருந்தது
அதை பார்க்க முடியாது
என் கண்கள் எரிந்தன
இது வலிதான்
குருவிக்காக என்
மனம் வெளியிடும் வலிதான்
புரிகிறது என் உணர்வு
அங்கும் இங்கும் சுற்றி பார்க்கிறேன்
எங்காவது ஓரிடத்தில்
பிரிந்த அதன் வாழ்க்கை
இருக்குமா?
எண்ணம் முழுக்க குருவியே
நிறைந்து கிடந்தது
குடித்து முடிக்கப்படாத
குறையோடு தேநீர்
என்னை பார்த்து கொண்டிருக்கிறது
அதை பற்றிய கவலை
எனக்கெதுவும் இல்லை
இப்போது தனித்து விட்ட
அந்த குருவி
எவ்வாறு வாழும்…?
என்பதே என் நினைவு.
அன்றைய நாள் கழிந்து
வந்த நாட்கள் எல்லாம்
தனித்துவிட்ட குருவியை
பார்த்துக் கொண்டேன்
தன்னந்தனியாக தன்
கூட்டை சீராக்கியது
உணவுகளை சேகரித்து
சேமித்தது
தான் வாழ வேண்டியதை
உணர்ந்திருக்கலாம்
இதுதான் வாழ்க்கை
என்று புரிந்திருக்கலாம்
எப்பிடியும் வாழ வேண்டும்
என்று உணர்ந்திருக்கலாம்
என்னைப் போலவே
யாருமற்ற இரவுகளை
கழிக்க அது பழகியிருக்கலாம்
அது இப்போதெல்லாம்
தானாகவே தனக்காக
வாழ்வதை காண
ஏதோ எனக்குள்
உற்சாகம் உருவெடுத்து
அருவியாய் ஓடுகிறது…
மீண்டும் ஒரு துணையை
தேடிக்கொள்ளும்
வருங்காலத்தை
புதிதாக தானே வரைந்து கொள்ளும்
எதையும் தாங்க
தன் மனதையும்
உடலையும் பழக்கப்படுத்தி கொண்டு
உயர உயர பறந்து செல்லும்…
ஆக்கம் கவிமகன்.இ