அலைகடல் வந்தே தாலாட்டும்
அழகிய புங்கை நகரினிலே ,
கலைகளில் நாட்டங் கொண்டவராய்க்
கண்விழித் தாரே கதிரெனவே !
மலையெனத் தடைகள் வந்தாலும்
மதியினால் வெல்லும் வல்லவர்தான்
விலையிலாக் கல்வி ஞானத்தால்
விழுமியம் தழைக்க வைத்தாரே !
பைந்தமிழ் செழிக்கப் பாரெங்கும்
பரவியே பசுமை வார்த்திருக்கும்
செந்தமிழ்க் குறளைக் கையெடுத்தே
செழுந்தமிழ்ப் பாக்கள் புனைந்திட்ட
பைந்தமிழ் நடையை என்னென்பேன் !
பாவலன் பெருமை போற்றுகின்றேன் .
எந்தமி ழருமை துலங்கிடவே
எழுந்ததே யிந்நூ லுலகெங்கும் .
முத்தென வொளிரும் திருக்குறளால்
முற்றிலு முலகு பயனுறுமே !
வித்தகத் தன்மை விளங்கிடவே
விளைச்சலை நாளும் நல்கிடுமே !
கத்திடுங் கடலி னோரமெல்லாம்
கவினுற மாண்பு பரவிடவும்
சித்தமே தெளிந்து செழுமையுற
செந்நெறி யெங்கும் நிலைத்திடுமே .
ஆழ்கட லதுவாம் குறளதற்கே
அணியெனப் பாக்கள் நெய்துவிட்டார் .
தாழ்விலாக் குறளின் பெருமையெல்லாம்
தரணிதான் போற்றிப் புகழ்ந்திருக்கும் !
வாழ்வினிற் றடங்கள் பதித்தவரை
வளர்தமிழ் கொண்டே வாழ்த்துகின்றேன்.
ஆழ்கடல் வான முள்ளமட்டும்
அழிவுறாப் புகழின் வாழியவே .
அன்போடு வாழ்த்துவோர் – திரு. திருமதி. சம்பந்தன் குடும்பம் – ஜேர்மனி