யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் தமிழ் மன்றம் முன்னெடுத்த முத்தமிழ் விழா இன்று 11.09. 2017 காலை கல்லூரியின் பிரதான கலையரங்கில் பீடாதிபதி ச.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
.
பேரறிஞர் அழகசுந்தர தேசிகர் அரங்கு, பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அரங்கு என இரண்டு அரங்குகளாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. (சிறுப்பிட்டியூர் சி.வை.தா.வின் மகனே அழகசுந்தரதேசிகர், வடமராட்சி தும்பளையைச் சேர்ந்தவர் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை)
.
விழாவில் பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன் தம்பதியர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கொழும்பு தமிழ்ச்சங்கத் தலைவர் த.சிவசுப்பிரமணியம், செல்வி சவுந்தராம்பிகை கணபதிப்பிள்ளை (அமரர் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் புதல்வி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
.
விழாவில் ஈழத்து இலக்கிய வரலாற்றை எழுதுவதில் ஈடுபட்ட அறிஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் பேராசிரியர் துரை.மனோகரன் ஆகியோர் தகைசார் வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதனால் மதிப்பளிக்கப்பட்டனர்.
.
விழாவின் அடையாளமாக வீரசங்கிலி என்ற விழா மலர் வெளியிடப்பட்டது. இது இரண்டாவது மலர் ஆகும். கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவின்போதும் வீரசங்கிலி என்ற விழா மலர் வெளியிடப்பட்டிருந்தது. அத்துடன் ம.க.அ..அந்தனிசில் எழுதிய வீரசங்கிலியன் வரலாற்று நூலும் விரிவுரையாளர் மு.கௌரிகாந்தனால் மீள்பதிப்புச் செய்து வெளியிடப்பட்டது.
.
குழு நடனம், குழுப்பாடல், வீரசங்கிலி நாடகம் எனப் பல்வேறு கலை நிகழ்வுகள் முகிழ்நிலை ஆசிரியர்களால் மேடையேற்றப்பட்டன.
.
விரிவுரையாளர் ஜெ.உதயகுமாரின் நெறியாள்கையில் மாணவர்களால் ஆற்றுகை செய்யப்பட்ட பட்டிமண்டபத்திற்கு நான் நடுவராகச் செயற்பட்டேன்.