நடந்து வந்த
பாதைகளெல்லாம்
முள் வேலிகளே
நடந்து கொண்டிருக்கும்
பாதைகளெங்கனும்
பள்ளமும் குழிகளுமே….!
இனி நடக்க
போகும் பாதைகளும்
துன்பமும் துயரமும்
எதிர் கொள்ளும்
என்பதில் ஏமாற்றமில்லை.
இலக்கினை
எட்டும் தூரம் வரை
நடக்க வேண்டியதும்
உன் பாதங்களே
நம்பிக்கை ஒன்று தான்
உன் பாதணிகளே..!
உணர்வுகளையும்
உண்மைக் கலைகளையும்
மதியாதவன்
குடிலில் கோபுர
நினைப்பு வேண்டாம்.
மதிப்பவன் மனையில்
சருகாயிருந்தாலும்
மெருகாவாய் வீணே
உருகாதே..
அன்புக்கு
காலம் நேரம் கிடையாது.
பிறப்பும் இறப்பும்
உருவமும் இருக்காது.
உணர்வு மாத்திரமே
அது
உண்மை விழிகளுக்கே
தோன்றும் வல்லமை
கொண்டது. அன்பை நேசி
அகிலம் அணைத்துக் கொள்ளும்.
ஆக்கம் கவிஞர் தயாநிதி