மரங்களில் இருந்து சத்தமின்றி உதிர்கின்ற இலைகளை இரசித்தவாறே பரபரப்புடன் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தேன்.
என்னை விட சுறுசுறுப்பாக உயரமான பெரிய பச்சை நிற வாளிகளில் தரம்பிரிக்கப்பட்டிருந்த வீட்டுக் கழிவுகள் மற்றும் எஞ்சிய உணவுகளை இரு தொழிலாளர்கள் அகற்றிக்கொண்டிருந்தனர்.
வீடுகளில் எஞ்சிய உணவுகளையும் ,ஏனைய கழிவுகளையும் அதற்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வாளியில் கொட்டிவிடுவோம்.ஒருவாரத்தில் புழுக்களின் நெளிவும் தவிர்க்க முடியாது.குளிர்காலமாக இருந்தால் இந்த தொல்லையில்லை.
பள்ளிச்சிறார்கள் பலர் இந்த தொழிலாளர்களுக்கு காலை வணக்கம் சொல்லிவிட்டு அவர்களில் யார் பலசாளிகளென ஒரு குட்டிப் பட்டிமன்றம் செய்துகொண்டுருந்தனர்.
துர்நாற்றம் என்பதைக்கடந்து சராசரி சிறுவர்களுக்கான உற்றுநோக்கும் ஆர்வமே அதிகமாக உள்ளதென உணரமுடிந்தது.
எந்த வித வேறுபாடுமின்றி அந்த வழியில் கடந்து செல்லுபவர்கள் இருவருக்கும் காலை வணக்கம் சொல்லத்தவறவில்லை.
நமது நாட்டில் என்றால்…?
இன்றுவரை நாம் சராசரி மனிதர்களாகவே
மதிக்கவேயில்லையே…!
அறியாமையில் உளறும் நாம் தீண்டத்தகாதவர்களாக நமக்குள் நாமே பதிவாக்கி நாயினும் கேகவலாமாக அல்லவா நடத்துகிறோம்.
இந்த தொழிலை செய்பவர்களுக்கு ஈழத்திலும்,இந்தியாவிலும் சாதியத்தின் பெயரில் சாபத்தை வேறு கொடுத்துவிட்டோம்.
வளர்ச்சியடைந்த நாட்டில் மட்டுமேன் இந்தக் கொடுமையில்லை.?
இந்த நிமிடம் வரை கேள்வி கேட்கிறேன்.
கத்தி ,கரண்டியால் உணவுண்டு காகிதத்தால் மலந்துடைத்து வாழும் குழந்தைகள் அவர்களது வேலையை கண்வெட்டாது இரசிக்கின்றனர்.
எதிர்மாறாக வாழும் நாம் தரம் பிரித்து தப்புத்தப்பாக பேசி மனிதனை மனிதன் மதிக்கத்தவறுகின்றோம்.
இந்த நாட்டில் வாழும் தமிழர்கள் சிலர் பழக்க தோஷம் காரணமாக…
„படிக்கவில்லையென்றால் சக்கிலியர் போல மலசலக்கூடம் கழுவவும் ,வீதி வீதியாக குப்பை அள்ளவுமே செல்வீர்கள் “
என்று தம்பிள்ளைகளுக்கு முன் உதாரணம் காட்டுகின்றனர்.
தமிழ் ஆசிரியர்கள் சிலர் கூட சிறுவர்களுக்கு இவ்வாறான எடுத்துக்காட்டுகளைக் கூறி கல்வியில் ஆர்வத்தை ஊட்ட முயல்கின்றனர்.
என்னுடைய கேள்வியெல்லாம் இதுதான்..
நீங்கள்தான் மூடர்கள் என்றால் பகுத்தறிவுடன் வளரும் தலைமுறையினரிடம் எதற்காக இவ்வாறான உப்புச்சப்பற்ற உளறல்களை வர்ணம் பூசி ஒப்புவிக்கின்றீர்கள்?
சாதியம் பேசுகிறீர்களா?
தொழிலின் தராதரம் பேசுகிறீர்களா?
ஆரம்ப காலங்களில் இந்த நாட்டில் புகலிடம் தேடிவந்த போது பலர் செய்த முதல் தொழில் சுத்திகரிப்புத்தொழில் தானே?
இன்று கூட மேலதிக வருமானத்துக்காக பலர் செய்யும் பகுதிநேரத் தொழிலாகவும் இருக்கிறது என்பதை நானறிவேன்.
தங்களது பிள்ளைகள் உங்களை எதிர்த்து கேள்வி கேட்காதவரையில் மட்டுமே நீங்கள் அறிவாளிகள் என்பேன்.
இன ,மத ,தொழில் பேதமற்று வாழ்வதற்கு வழிசமைத்து கொடுத்த வளர்ச்சியடைந்த நாடுகளில் வந்தும் பழையபஞ்சாங்கமும் வெட்டிநியாமும் பேசுவது முறையா?
வளரும் தலைமுறையினருக்கு வாழ்வியல் சூழலைக்கேற்ப உற்சாகமூட்டுங்கள்,விளக்கமளியுங்கள்.
அறிவுரையென்ற பெயரில் காலமாற்றத்தை மறந்து அரைத்த மாவையே அரைக்காதீர்கள்.
அறியாமையில் இருந்து தெளிவு பெறுவதற்கு கல்வி வேண்டும்.
அந்தக்கல்வியை மேன்மைப்படுத்துவதற்காக அறிவிலிகள் ஆகிவிடாதீர்கள்.
(இந்த தொழிலாளர்களின் அனுமதியுடன் ஒரு நிழற்படம் எடுத்தேன்.)
-வாணமதி.