ஓம் முருகா என்றுருகி உனக்காகப் பாடுகிறேன் -இந்துமகேஷ்

ஓம் முருகா என்றுருகி
உனக்காகப் பாடுகிறேன்
உன்னடியைக் காண்பதற்கே
உயிர்சுமந்து வாடுகிறேன்

கண்ணிரண்டும் பெற்ற பலன்
கந்தன் முகம் கண்டது – நான்
காதிரண்டும் பெற்ற பலன்
கந்தன் புகழ் கேட்டது

கையிரண்டும் பெற்றபலன்
கந்தனுக்காய் குவிந்தது நான்
காலிரண்டும் பெற்ற பலன்
கந்தனிடம் சென்றது

வாயினாலே பெற்றபலன்
கந்தன் பெயர் சொன்னது – நான்
வாழுகின்ற மூச்சின் பலன்
கந்தனுக்காய் உயிர்த்தது

சிரத்தினாலே பெற்ற பலன்
கந்தனுக்காய் பணிந்தது – நான்
சிந்தையாலே பெற்ற பலன்
கந்தனையே நினைத்தது

மேனியாலே பெற்ற பலன்
கந்தன் தொண்டு ஆனது – நான்
மேதினியில் பிறந்த பலன்
கந்தனாலே நிறைந்தது.

ஓம் முருகா என்றுருகி
உனக்காகப் பாடுகிறேன்
உன்னடியைக் காண்பதற்கே
உயிர்சுமந்து வாடுகிறேன்

-இந்துமகேஷ்