அம்மாவின்
கைப் பக்குவம்
அமிர்தம்..
கஞ்சியோ
கூழோ
அம்மா பகிர்கையில்
வயிறு நிரம்பும்..
உப்போ
புளியோ
காரமோ குன்றிடினும்
அம்மா பகிர்கையில்
ருசிக்கும்..
இருப்பதை
கொண்டு எம்
விருப்பை
நிறை வேற்றுவாள்.
எப்படியென்பது
வினாவாகவே நீள்கின்றது..
அம்மியும்
உரலும் ஆட்டுக்கல்லும்
இஞ்சியும் உள்ளியும்
முருங்கையும்
தூதுவளையும்
முசுட்டையும்
அம்மா கைக்குள்
என்றைக்குமே…
பசியறியோம்
வலியறியோம்
நோயறியோம்.
இன்று மிக்ஸ்சரும்
கிரைண்டரும் குக்கரும்
இன்னும் இன்னும்…
ஆனால் அம்மா இல்லை..
வலுவிழந்து
உடல் நலிந்து
பிணி படர்ந்து
வாழ்விழக்கின்றோம்.
வசதியிருந்தென்ன
அம்மா இல்லாமல்
வாழ்வேதுண்டு..
கவிஞர் தயாநிதி