மூர்க்கம் முகத்தில் அறைகிறது.
இடைவேளைகளற்று
என் சிரசுகளின் நடுவே துளையிட்டு இறங்குகிறது
எப்போதோ கேட்ட ஒரு பிணத்தின் இறுதிக் குரல்.
விந்துகளை விமர்சனம் செய்தபடியே
பிறந்துவிடுகிறது பெண் சிசு.
யார் மீட்டினார்கள் எனத் தெரியவில்லை
நாசியில் மணக்கிறது
அறுந்த தந்தியில் வழிந்த அந்த சிவப்புக்கறை.
விசித்திரமாய்
இன்றைக்கு மட்டும் கேட்காமலிருக்கிறது
சோம்பேறி எனப்படுபவனின்
அந்த அகோர நெட்டி முறிப்பு.
நேற்றைக்கும் நடந்திருக்கிறது
ஒரு ரூபாய் குத்திக்காக
வாடகைக்கு விடப்படும்
அவளுடைய முழு நேர வியர்வை.
ஒரு பைத்தியக்காரனின் பிதற்றலை
அர்த்தமற்றதென்று
சும்மா கடந்து போக முடியவில்லை.
இப்போது,
மூர்க்கம் என்னையும் அறைந்துவிட்டுப் போகிறது.
– சாம் பிரதீபன் –