பல்லாயிரம் கோடி ஜெயலளிதாவின் சொத்து நடந்தது என்ன,
பிரான்ஸ்வாழ் ஈழத்தமிழர் அஜந்தன் இயக்கத்தில் நட்சத்திரம் நிறுவனத்தயாரிப்பில் முற்றுமுழுதான ஈழக்கலைஞர்களின் பங்களிப்பில் பிரான்ஸில் தாயாரிக்கப்பட்ட ஏணை முழுநீளத்திரைப்படத்தை கடந்த ஞாயிறு மாலை 6 மணிக்கு paris CGR திரையரங்கில் கண்டு இரசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
புலம்பெயர் தமிழர் வாழ்வானது,
நுணுக்கமான சமூகப்பார்வையும் சிந்தனைத்திறனும் கொண்ட அஜந்தன் என்ற படைப்பாளியின் மனக்கண்ணால் பார்க்கப்பட்டதால்,போலிகளற்ற உணர்வுபூர்வமான திரைவடிவம் பெற்றுள்ளது „ஏணை“ என்ற எதார்த்த சினிமாவாய். ஒப்பனைகளுடன் கூடிய இடைச்செருகல்கள் ஏதுமின்றி,பார்வையாளர் ஒவ்வொருவரும் „அட இது என்வாழ்க்கையாச்சே என்று உணர்வு தொட்டு விழிநீர் கசியும் வகையில் ஏதோ ஒருவிதத்தில் தத்தமது வாழ்வை உணரும் விதத்தில் சொல்லப்பட்ட திரைக்கதை(கள்) யில் தனக்கான தனிமுத்திரை பதித்துள்ளார் இயக்குனர் அஜந்தன்.திரைக்கதையும் வசனங்களும் அளவாய் கச்சிதமாய் அருமை பாராட்டுகள்.புலம்பெயர் தமிழரின் அத்தனை வயதெல்லை மனிதர்கள் பற்றியும் அவர்கள் வாழ்வு பற்றியும் இத்தனை சிறப்பாய் இதுவரை யாரும் கலைவடிவமொன்றைப்படைக்கவில்லை.நிச்சயம் ஈழத்தமிழர் வாழ்வின் ஒருகாலகட்டத்துக்கான பெறுமதி மிகு ஆவணம் „ஏணை“ திரைப்படம் என்றால் அது மிகையில்லை.அடுத்த புலம்பெயர் சந்ததிக்கு தமது முன்னோர் இங்கு காலூன்றிய காலத்துக் கண்ணீர் கதைகளுக்கான உண்மையும் நேர்மையுமான சாட்சியாய் இப்படைப்பு நிச்சயம் அமையும்.புலம்பெயர் தமிழரின் ஒரு பக்க அப்பாவிகளின் வாழ்வு பற்றிச் சொல்லி மனமுருக வைத்தாலும் மறுபுறம் படுபாவிகளாய்த்திரியும் ஒரு சாராரின் மனங்களிலும் அறைந்து சென்றது இத்திரையின் கதை.“என் வீட்டு முற்றமும் எனக்கொரு ஏணை தான்“என்ற கருப்பொருளில் பொறுப்பான ஈழத்தமிழ்ப்படைப்பாளியாய் தனித்துவமாய் மிளிர்கிறீர்கள் அஜந்தன்.பாராட்டுகள்.
ஈழத்தமிழர் வாழ்வை எந்த நாட்டு சினிமாவல்லுனர்கள் திரைப்படமாக்கினாலும் அதில் கதையும் நடிப்பும் இருக்குமேயன்றி உயிரும் உணர்வும் கலந்துதர அவர்களால் முடியாது.நமது கதைகளுக்கான சமரசமற்ற நேர்மையான படைப்பாளிகள்,அனைத்தையும் தம் வாழ்வால் உணர்ந்து தெளிந்த நம்மவராக மட்டுமே இருக்க முடியும்.இனியும் இருக்கப்போகிறார்கள் என்ற பெரு நம்பிக்கை இந்த ஏணை போன்ற திரைப்படங்களால் வெகுவாக அதிகரிக்கின்றது.கதை மட்டும் தானென்றல்லாது மிக இயல்பான எதார்த்தமான நடிகர்கள் தெரிவிலும் இயக்குனரின் தெரிவு வெகு தெளிவு. அப்பாவிக்கதாநாயகனாக,உணர்வுகளின் மொழிகளை அப்படியே தன் கண்களிலேயே உலவவிட்டபடி திரையில் காட்டிய துடிப்பான இளைஞன் கௌதம்,மிக இயல்பான குடும்பத்தலைவனாக அவர்தந்தை கோணேஸ்,தங்கை அட்ஷயா.அழகும் சுட்டித்தனமும்,நவரசங்களும் முகத்தில் குறுகுறுக்க வலம்வரும் கதாநாயகி கிருசாந்தி,ஏனைய துணைக்கதாபாத்திரங்கள் அனைவரும் அந்தந்தப்பாத்திரத்தில் சினிமா என்று எந்த இடத்திலும் மேலதிகமாக உணர்வுகளை இடறாத வண்ணம் வாழ்ந்துள்ளா்கள்.கூட்டமாக நண்பர்கள் பலரை வில்லன்களாகப்பார்த்ததில் நானே மிரண்டுவிட்டேன்.தென்னிந்திய சினிமாக்காரர்கள் பார்த்தால் கவனம் வில்லன்களே உங்களை அப்படியே அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்???.என்னா ஒரு வில்லத்தனம் ???????அசத்திவிட்டீர்கள் போங்கள்.கலை என்ற ஒன்றுக்காய் எதிர்பார்ப்புகள் ஏதுமற்று இணைந்த நடிகர்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறோம்.நமது சினிமாவின் அடுத்தடுத்த நகர்வின் நம்பிக்கை ஆணிவேர்கள் நீங்கள்.
திரைப்படத்தின் மொத்த உணர்வையும் அப்படியே அள்ளி உள்ளே வைத்த அர்த்தம்மிகுந்த அஜந்தனின் பாடல் வரிகளோடு உயிர்வரை ஊடுருவும் ஈஸ்வர் இசையிலும் உணர்வுகளின் சங்கமமாய் சிவமுரளியின் கணீர்க் குரலிலும் மிகப்பொருத்தமான இடத்தில் ஒலித்த அந்த இரண்டு பாடல்களும் ஆஹாஅருமையிலும் அருமை.கேட்க கேட்கத் தெவிட்டாத பாடல்களிரண்டும் படத்தின் பெரும்பலம்.பாராட்டுகள்.
உங்களையெல்லாம் வைத்துக்கொண்டா இன்னொரு நாடு தேடி கலைக்காய் ஓடுகிறோம்?என்ற தவிப்பு மனதில் எழாமல் இல்லை.படத்துக்கான பின்னணி இசை வழங்கிய அனிஸ்ரனும் பொருத்தமான இடத்தில் கணக்காய் இசைத்த இசை மிகப்பொருத்தம்.ஆனாலும் இயக்குனர் விருப்பமா அல்லது இசையமைப்பாளர் முடிவா தெரியவில்லை சில காட்சிகளில் நீண்ட நேரம் துளியும் இசையற்ற நிலை கதையின் உணர்வுக்காய் என்றாலும் உயிர்ப்பான தன்மையை கொஞ்சம் பாதித்துவிட்டதோ என்று எண்ணத்தோன்றியது.
கோவிசண்ணின் ஔிப்பதிவு தரம்.வாழ்த்துகள்.மிகச்சில இடங்களில் மட்டும் கமெரா கொஞ்சம் ஆடியிருந்தமையும் ,அருகில் தோன்றும் காட்சிகள் சில மிக மிக கண்ணுக்கருகாமையில் தோன்றியதோ என்றும் சிறு உணர்வு.ஆனால் ட்றொலி போன்ற தொழில் நுட்ப வசதிகள் பாவிக்கப்பட்டிருந்தால் இவை தவிர்க்கப்பட்டிருக்கும் என்பது ஔிப்பதிவாளர் அறிவார்.ஆனால் மொத்த திரைப்படமுமே மிகக்குறைந்த வளத்தில்,மிக்குறுகிய இடத்திற்குள், ஆகக்கூடிய மனிதமுயற்சிகளின் ஒருங்கிணைவினால் மட்டும் உருவாக்கப்பட்ட முயற்சி என்ற உண்மையின் முன் இவை ஒரு குறைகளே இல்லை.இன்னும் காலங்கூடிவரும் போது இந்தத்திறமைசாலிகள் இன்னும் பன்மடங்கு தரத்துடன் நமக்கு நற்படைப்புகளை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை விதை ஆழமாய் விதைக்கப்பட்டுள்ளது இக்கலைஞர்களால்.கதைக்கேற்ற வேகத்தில் கச்சிதமாய்ப்படத்தொகுப்பு அமைந்திருந்தது.பாராட்டுகள் சங்கர்.
படம் பார்க்க தொடங்கும் போது மிகச்சாதாரணமாய் கொஞ்சம் மெதுவாகவும் நகரத்தொடங்கிய திரைக்கதை படிப்படியாய் ஒவ்வொருவர் கதையவிழ்த்து உலவவிடும் போதெல்லாம் விழிநீர் கசிய வைத்து இறுதியில் முடியும் போது நம்மையறியாமல் கைதட்டி ஓசை எழுப்பும் வண்ணம் முழுமையுணர்வைத்தந்ந இயக்குனர் அஜந்தனுக்கும் படக்குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.???????????இது திரைப்படம் குறித்த என்பார்வை.
இனி நமது மக்கள் மற்றும் கலைஞர்கள் நோக்கிய என் சிறு ஆதங்கம்.
இத்தனை பேரும் இணைந்து கருவாக்கி உருவாக்கிய உயிர்ப்படைப்பு முதலில் திரையிடப்பட்டு பெருமளவினரால் பார்க்கப்பட்டு வெற்றிபெற்றது மகிழ்வே.ஆனாலும் நமது சினிமாவுக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கை குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள்ளேயே அடங்கியிருப்பது சிறிது கவலையளிக்கின்றது.ஈழத்து சினிமா என்றால் நாடகத்தன்மையாயிருக்கும், தென்னிந்திய சினிமாவுக்குரிய பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாயிருக்கும் என்று ஆழமாய் மனதில் விழுந்திருக்கும் எண்ணங்களை நமது சமீபத்திய படைப்பாளிகளின் படைப்புகள் உடைத்தெறிந்துள்ளன.அதைப் பார்த்தவர்கள் உணர்வார்கள்.பார்க்காமலே இருப்பவர்கள் எப்படி உணர முடியும்?அப்படியானவர்களை நமது தெளிந்த கருத்துகள் மூலம் திரையரங்கிற்கு இட்டு வருவது நம் கடமை.புதிய புதிய பார்வையாளர்கள் அதிகரிக்கும் போதே படைப்பாளிகளின் கனவுகள் கதைகள் வெற்றி பெற்று தொடர்ந்து நகரும் நிலை உருவாகும்.எத்தனையோ கலைத்துறையில் முடிசூடி நிற்கும் நாம்,நிறைந்த நம் கலைவளங்களை முழுவதுமாய் பயன்படுத்தும் சினிமாத்துறையை வளப்படுத்துவது மிக அவசியம்.பல்துறைக்கலைஞர்களும் ஒன்றிணையும் மாபெரும் ஊடகமிது.உணர்வோம்.நமது சிந்தனைக்காய்,பொழுது போக்கிற்காய் நமது சினிமாவை இரசிக்கும் வண்ணம் மாற்றங்காண்போம்.நம்மை நாமே பலப்படுத்தி தனித்துவமாய்த்தடம் பதிப்போம்.