எரிச்சல் படும்
எழுத்தாணிகளின்
அழுத்தங்களினால்
விரல்களும் விசனம்
கொள்கின்றன.
புரியாத
புதிராக்கி
பதியாத பக்கங்களில்
கவலைகளை
கதிராக்கி
அறுவடைகளை
பெருக்குகின்றாய்.
எதிர்பார்ப்புக்களை
ஏராக்கி
எண்ணங்களை
சீர்குலைத்து
மன வயல்களில்
ஏமாற்றங்களை
விதைக்கின்றாய்.
துன்பமெனும்
களைகளை
களை எடுக்க முடியாமல்
முக்காடு
போடுகின்றாய்
முயற்சி எனும்
முற்றத்திலே
நம்பிக்கையெனும்
கோலம் இடாமலே
இஸ்டத்துக்கு
இயங்குகின்றாய்.
தனிமையெனும்
முள் வேலிக்குள்
மெளன மொழியோடு
சலனமின்றி
சஞ்சரிப்பதாய்
எண்ணித் துணிகின்றாய்.
அன்பெனும்
ஊஞ்சலில்
ஆடமறந்த படி
தருணங்களை
கடக்கின்றாய்
வாழ்க்கை ஒரு முறை
என்பதை
உணர்ந்து கொண்டால்
மட்டுமே சுபீட்ஷம்.
எழுத்தாணி எச்சரிக்கின்றேன்.
ஆக்கம் கவிஞர் தயாநிதி