என் பயமும் என் பயணமும் !மன்னார் பெனில்

என் சக்கர நாற்காலியின்
பாகங்கள் பழுதுபட்டு
ஒரடி நகர பெரிதும் மறுக்கிறது

என்னிடம் உள்ள
சொற்ப பெலனைக்கொண்டு
என்னையும் வருத்தி
அதனையும் வருத்துகின்றேன்

தன்னால் முடியாது
என்பதனை பலவகை
சத்தங்கள் ஊடாக
என் சக்க நாற்காலி
வெளிப்படுத்தியும்
நான் அதனை விடுவதாக இல்லை

என்னை மதித்து
பல விழாக்களுக்கு
எனக்கு அழைப்பு வருகிறது
சந்தர்ப்பங்கள் தேடி வரும்போது
பயன்படுத்த வேண்டுமல்லவா

பல சிரமங்களுக்கு மத்தியில்
முக மலர்ச்சியோடு விழாக்களில்
கலந்து விட்டு வீட்டுக்கு வந்தால்
பல்வேறு உடல் உபாதைகள்
என்னை வருத்த காத்துக்கிடக்கும்

முதலில் சிறுநீரில்
கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கும்
அதன் தாக்கம் நடுக்கத்தோடு
கூடிய காச்சலில் வந்துமுடியும்

உடலில் இருக்கும் காயத்தில்
ஒருவித துர்நாற்றத்தோடு நீர் கசியும்
அதை உணர்ந்தபோதே
பாதிப்பை எண்ணி மனம் சோர்ந்துவிடும்

பய உணர்வே
பாதி உயிரை கொண்றுவிடும்
என்று சொல்லும் பலருக்கு தெரியும்
பயமின்றி வாழ முடியாது என்று

இப்போதெல்லாம்
அந்த பய உணர்வு எனக்கு
அதிகத்திலும் அதிகம்
எங்கே எமனிடத்தில் இருந்தும்
எனக்கு அழைப்பு வந்துவிடுமோ என்று

எந்த அழைப்பையும்
தட்டிக்களிக்காத நான்
எமன் அழைக்கும்போது
அந்த அழைப்பை
நிராகரித்தே ஆகவேண்டும்
என் அன்பை மட்டும் நம்பி
  என்னைக் கைப்பிடித்தவளுக்காக

இறை பக்தி அதிகமுண்டு
தாயின் கருவில் உருவாகும் முன்பே
எனைப் பெயர் செல்லி அழைத்தவர்
தன் உள்ளங்கையில் என் பெயரை
பொறித்துள்ளவர் என்னை ஒருபோதும்
கை விட மாட்டார் கை விடவே மாட்டார்

ஆக்கம் மன்னார் பெனில்