கனவுகள் கற்பனைகள் என்று மனத்தளவிலேயே படம் காட்டிக்கொண்டிருக்கிற வாழ்க்கை.
இப்படித்தான் வாழவேண்டும் எனச் சிலரும் எப்படியும் வாழலாம் என்பதாய்ப் பலரும்
வாழ்நாட்களை விரட்டிக் கொண்டிருந்தாலும் எப்படியோதான் கழிந்துபோகிறது காலம்.
சுமைகள் எதுவும் சுமக்கவேண்டிய அவசியமில்லாத அல்லது அந்தச் சுமைகளை மூத்தவர்கள் சுமப்பார்கள் என்ற நிலையில் இளமைப்பருவம் இனிமையாகவே கழிந்துபோகிறது.
சின்னச் சின்ன ஏக்கங்கள் எதிர்பார்ப்புக்கள் பள்ளிப்பருவத்தில் வரும்போதும் அவை உடனுக்குடன் தீா்க்கப்பட்டுவிடுவதால் கவலைகள் ஏதுமின்றி எதிர்காலம் என்ற இனிய கனவுக்குள் மனம் புகுந்துகொள்கிறது.
„நல்லாப் படிக்கவேணும்!“
„படிச்சிட்டு..?“
„நல்ல உத்தியோகம் பார்த்து நல்லா உழைக்க வேணும்!“
„அதுக்குப்பிறகு…?“
„அதுக்குப்பிறகு என்ன.. எல்லாரையும்போல கலியாணம் முடிச்சுக்கொண்டு பிள்ளை குட்டியளைப்
பெத்துக்கொண்டு சந்தோஷமா இருக்க வேண்டியதுதான்.!“
வளர்ந்து விட்டால் சந்தோசங்கள் பறிபோய்விடும் என்கின்ற உண்மை புரியாத வயது அது.
அந்த வயதில் அப்படித்தான் கனவுகாண முடியும்.
வாழ்க்கை எப்போதும் நிரந்தரமானது என்ற மாயைத்திரையை விலக்காமல்
வாழ்க்கை நாடகத்தின் காட்சிகளை மனத்துக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தவரை
அது இனிமையாகத்தான் இருந்தது.
எல்லோர் வாழ்க்கையும் ஒருநாள் முற்றுப்பெறும் என்ற இயற்கையின் விதியை மிகச் சிறியவயதில்
எனக்குக் காட்டியது என் அப்பாச்சியின் மரணம்.
அதற்கு முன்னும் சில மரணங்கள் நிகழ்ந்திருந்தன எனினும் அவைகள் எதுவும் எனக்கு நினைவில் இல்லை.
ஒப்பாரிகளும் ஓலங்களும் பறைமேளச் சத்தமும் பாடைகளும் என்று வேலிக்குப் பின்னால் நின்று
பார்த்த பொழுதுகளில் அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் „ஆரோ செத்திட்டனமாம்!“ என்பதுபோன்று
அலட்சியப்படுத்துகிற வயதில் அந்த மரணங்கள் என்னிடத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தியதாக இல்லை.
அப்பாச்சிக்குப் „பந்தம்“பிடித்துக்கொண்டு நின்றதுமட்டும் இன்னும் என்னுள் முதல் மரண நிகழ்வாய் பதிந்து
கிடக்கிறது.
பெரியப்பு, சீனியப்பு, அப்பு, பெரியாத்தை, சீனியாத்தை, ஆச்சி, மாமிமார் அம்மான்மார் என்று அவவைச் சுற்றி
நின்று அழுதவர்களின் கண்ணீர் எல்லாரும் ஒருநாளைக்கு சாகப் போயினம் என்ற உண்மையை எனக்கு அழுத்திச் சொல்லியிருக்கவேண்டும்.
பயம்?!
அன்றைக்குத்தான் அது என்னைத் தொட்டுக்கொண்டதாக நினைவு.
அப்பாச்சியின் காரியங்கள் எல்லாம் முடிந்து அடுத்துவந்த இரவுகளில் எனக்குத் திடீர் திடீர் என்று விழிப்பு வரும்.
என் „ஆச்சி“யின் (அம்மாவின்) பாயில் அவவுக்கு இரண்டு பக்கத்திலும் நானும் தங்கச்சியும்
படுத்திருந்து ஆச்சியை இறுகக் கட்டிக்கொண்டு நிம்மதியாகத்தூங்கிய இரவுகள் மெள்ளத் தொலைந்து
கொண்டிருந்தன.
„ஆச்சி…!“
நன்றாக நித்திரை கொள்ளும் ஆச்சியை மெதுவாகத் தட்டி எழுப்பினேன்.
„என்னடா?“
„நான் வெளியிலை போகப்போறன்!“
„..ம்..போ.. போய் இருந்திட்டு வா!“
வெளியே கும்மிருட்டு.
விழித்துப் பார்த்துக்கொண்டே சொன்னேன்.
„எனக்குப் பயமாக்கிடக்குது!“
„பயமோ.. என்னடா இது புதுப்பழக்கம்.. என்ன பயம்..முத்தத்திலை இறங்கிறதுக்கு!“
ஆனால் முற்றத்திலிருந்து ஒரு இருபதடி தாண்டி அப்பால் இருக்கும் தென்னைமரத்துக்குக் கீழே போகவேண்டும்.
„எனக்குத் தெரியா.. எனக்குப் பயமாக்கிடக்கு.. விளக்கை எடுத்தண்டு வா!“
„ம்..ஆம்பிளைப் பிள்ளை பயப்பிடுறான் பார்…!“
தூக்கக் கலக்கத்துடன் எழும்பும் ஆச்சி அரிக்கன் லாம்பின் சுடரைத் தூண்டி அதை எடுத்துக்கொண்டு
என்னோடு முற்றத்தில் இறங்கினா.
„போ.. போய் இருந்திட்டு வா!“
அமாவாசை இருட்டுக்கு அரிக்கன்லாம்பு வெளிச்சம் எந்தமூலைக்கு?
எனது நிழலே பெரிதாய் பேயுருக்கொண்டு முற்றத்து வேலியில் கூத்தாடிற்று.
இருட்டுக்குள் கண்களைச் சுழற்றி எங்கிருந்தாவது ஏதாவது வருகிறதா என்று பார்த்துக்கொண்டு அவசர
அவசரமாக „ஒண்டு“க்குப்போய்விட்டு உடல்முழுதும் சட்டெனப்பரவி மறைந்த சிலிர்ப்புடன் களிசானைப்
பூட்டிக்கொண்டு ஆச்சியை முந்தியபடி வீட்டுக்குள் ஓடினேன்.
„என்னடா..வடிவா இருந்திட்டியா..?“
„இருந்திட்டன்.. ஆனா..வயித்துக்கை என்னமோ செய்யுது..!“
இது வயிற்றுக் கோளாறினால் அல்ல என்பதும் பயத்தினால் என்பதும் ஆச்சிக்குப் புரிந்திருக்கும்.
„இரு.. இஞ்சித் தேத்தண்ணி சுடவைச்சுத் தாறன்!“
„வேணாம் ஆச்சி.. நீ படு!“
ஆச்சி தூங்கிய பின்னும் அடிக்கடி எனக்கு விழிப்பு வந்துகொண்டிருந்தது.
„பிறந்தவை எல்லாரும் செத்துப்போறதெண்டால் ஒருநாளைக்கு என்ரை ஆச்சியும் செத்துத்தானே போவா?“
– பயத்தை மீறிக்கொண்டு என் கண்களில் கண்ணீர் திரண்டது.
நானும் ஒருநாள் செத்துப்போவேன் என்ற நினைப்பு அப்போதில்லை.
ஆச்சி சாகப்படாது.
புரியாத பருவத்தில் வாழ்வின் நிலையாமையை நான் உணர்ந்துகொண்டதாக நான் புரிந்துகொண்ட
ஒருபொழுதில் என்னுள் ஒருவித பயம் வந்து ஒட்டிக்கொண்டது எதனால் என்று அப்போது எனக்கு விளங்கவில்லை.
இருப்பவர்கள் எல்லோரும் ஒருநாள் இல்லாமல் போகப் போகிறார்கள் என்ற உண்மை புரிந்ததனால் விளைந்த பயமா அது?
இறந்தவர்கள் எஙகு போகிறார்கள்?
இத்தனை காலம் இருந்தவர்கள் இப்போது இல்லையெனில் எங்கே அவர்கள்?
நிச்சயமாக அவர்கள் இந்த உலகத்தைவிட்டு வேறு எங்கும் போயிருக்க மாட்டார்கள்.
அப்படியானால் சிலபேர் சொல்கிறதுமாதிரி ஆவிகளாக பேய்களாக உலவிக்கொண்டிருப்பார்களா?
சரி அப்படி உலவிக்கொண்டிருப்பவர்கள் ஏன் இரவுகளில்மட்டும் வர வேண்டும்.
பகல்பொழுதின் இரைச்சல்கள் அவர்களுக்கு எரிச்சலூட்டுமோ என்னவோ!மனிதர்கள் இயக்கமில்லாமல்
உறங்கும் பொழுதுகளில்தான் அவர்கள் தம்பாட்டுக்கு உலவித்திரிய முடியுமோ என்னவோ.. அல்லது
தத்தம் ஆவிகளை வெளியே உலவவிட்டு மரக்கட்டைகளைப் போல உறங்கிக்கொண்டிருக்கும்
மனிதர்களின் ஆவிகளோடு இறந்தவர்களின் ஆவிகள் பேசுவதற்கு இரவுதான் ஏற்ற நேரமோ என்னவோ?
வாழ்க்கை மர்மம் நிறைந்ததுதான்.
மரணம் என்னும் இந்த மர்மத்துக்கு விடைகிடைக்கும்வரை மனிதனின் அச்சமும் அவனிடமிருந்து
விடைபெறப்போவதில்லை.
ஒன்றைப் பற்றித்தெரியாமல் அதைப்பற்றிப் பயப்படுவதில் அர்த்தமில்லை. பேய்களைப்பற்றி
ஆவிகளைப்பற்றி ஆராவது சொல்ல மாட்டார்களா?
இப்போது என் கவனம் மா்மக்கதைகளின் பக்கம் திரும்பிவிடுகிறது.
கல்கி குமுதம் ஆனந்தவிகடன் கலைமகள் கண்ணன் கல்கண்டு அம்புலிமாமா இவற்றோடு, வண்ணத்தில்
கொலை கொள்ளைக்காரர்களையும் துப்பாக்கியையும் அதற்கு முன்னால் அலறும் பெண்களின்
முகத்தையும் வரைந்து வா வா என்றழைக்கும் பேய்க்கதைகள் மலிவுவிலை மர்ம நாவல்களாகப்
புத்தகக் கடையில் தொங்கிக்கொண்டிருந்தன.
அவைகளை வாசிக்கும் வயது எனக்கு இல்லை என்பதால் அவற்றை வாங்கி பாடப் புத்தகங்களுக்குள்
மறைத்து வைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் தனியாகப் போயிருந்து வாசிக்க ஆரம்பித்தேன்.
இரவு நேரங்களில் பேய்க்கதை மன்னன் பிடி.சாமி பேய்களையும் கூட்டிக்கொண்டு எங்கள் வளவுத்
தென்னைமரங்களுக்குக் கீழே வந்தமர்ந்தார்.
ஏற்கனவே சரியான பயங்கொள்ளி என்பதால் அவரால் என்னை நன்றாகவே மிரட்ட முடிந்திருந்தது.
அது என்னமோ அந்தப் பொழுதுகளில் பயந்து பயந்து வாசிப்பதில் அல்லது வாசித்து வாசித்துப்
பயப்படுவதில் உள்ளார ஒரு மகிழ்ச்சி இருந்தது.
ஏராளமான எழுத்தாளர்கள் அப்போது பேய்க்காட்டப் புறப்பட்டிருந்தாலும் பி.டி.சாமி என் மனதில்
இடம்பிடித்துக்கொண்டார்.
அவருக்கென்று ஒரு தனிநடை.
தமிழால் பேய்க்காட்டுவதற்கும் ஒரு தனித்திறமைவேண்டும்.
அது அவரிடம் அதிகமாகவே இருந்தது அதனால்தான் அவர் அதிகமாக எழுதிக்குவித்தார்.
என்னைப் போன்ற அப்போதைய பேய்ப்பெடியங்கள் நிறையப்பேரை தன் பே எழுத்துக்களால் பேப்பிடி
பிடிச்சுக்கொண்ட ஒரு பேய்க்காய் பி.டி.சாமிதான்
– சின்னாச்சியின்ரமோன்.