ஈழத்தேசமதில் கிழக்கோர் அதியசமே
ஆழமாய் நேசித்தால் மட்டும் உணரமுடியுமிதை
கானகத்துப் பட்சிகளும் வீரக்கதையை விபரிக்கும்.
தேனகத்து செவ்விதழ்களில் பண்பாட்டுத் தேனூறும்.
நீண்ட கடலைப் போர்வையிட்டு உறங்கும்
நித்திலத்தின் விந்தையான மட்டுநகர் அழகு
கொட்டித்தீராது கொள்ளைபோகும் மனது
பட்டிதொட்டியெங்கும் வற்றாது பாச உபசரிப்பு
வெண்ணிலாவின் ஒளிகுடிக்க படையெடுக்கும்
நண்டுகளின் நடைபதிந்த மணற்சுவட்டுகள்..
கன்னிகளின் காந்தமான தோற்றம்மட்டுமல்ல
பெண்ணியப்பெருமைகளால் பேறானது ஒழுக்கமும்..
தமிழ்வாழும் பல கிராமங்களை உறுதிசெய்கிறது
மட்டுநகர் காரிகைகளின் பக்தியொழுக்க மரபு..
வீரத்தை விபரிக்க விளம்பரமேதும் தேவையில்லையே
கருவிலூறும் தீரத்தோடு மண்ணூட்டும் பெருவீரமது.
அழிந்துபோன தமிழர் கலைகள் இன்றும்
இங்கே தான் கொஞ்சமாவது உயிர்வாழ்கிறதே.
எங்களின் தலைநகர் நிறைய மாற்றமான போதும்
ஊறுதே பாசம் சாள்ஸ் அன்ரனியின் இறுமாப்பு போல
மாவிலாறு தொட்டு முள்ளிவாய்க்கால் வரை
உயிரைக் காணிக்கையிட்ட பெரும் தவமல்லவா..?
பேடியரின் சதி வியூகத்தில் உடைக்கப்பட்ட
வடக்கையும் கிழக்கையும் வரலாறு பிரிப்பதேயில்லை
ஈழப்போரின் வெற்றித்திளைப்புப் பதிவுகள் பல
கிழக்குப்புதல்வர்களின் குருதியால் எழுதப்பட்டவை.
அன்று வன்னிக்கல்லறைகளில் தியாகசீலங்களான
உயிர்க்கொடைகளோ சரித்திரப்பொக்கிசங்களே
இம்மக்களுக்கு மறுபெயர் விசுவாசமென்பேன்
பழகிப்பார்க்காதவருக்கு இது புரியப்போவதில்லை
ஆபத்து நேரத்தில் என்னுடன் கூட இருந்த பலரில்
அதிகமானோர் கிழக்குத்தோழர்கள் தான்
என் அடங்காப்பற்றை எப்படி நேசிக்கின்றேனோ
அவ்வாறே கிழக்குமண்மீதும் எனையறியாக் காதல்
வடக்கும் கிழக்கும் இணையவேண்டுமென்பது
வரலாற்றுக் கடமையென காலம் உணர்த்திநிற்கிறது.
–வன்னியூர் செந்தூரன்–