என் இரவுகளையெல்லாம்
நீதானே களவாடிச்செல்கிறாய்
மனவழி புகுந்து வார்த்தை ஜாலத்தில்
உதயமாகும் என் கவிதைகளுக்குள்…?
ஒட்டி உறவாடும் உன் மேலான காதல்
ஒட்டுமொத்தமாய் உறவுகள் கூடினாலும்
ஒட்டியும் ஒட்டாத உணர்வோடு ஒரு வெறுமை
ஓரமாக மனத்திற்குள் நீதான் ஒளிந்திருப்பாய்?
வன்மை பொருந்திய வல்லினமும் நீதான்
மென்மைகொண்ட மெல்லினமும் நீதான்
இடை இடை ரொம்பத்தான் மோசமாய்
இடையின செருகல் இடைவெளி எமக்குள்..?
உனை எழுத மாட்டேன் இனி
தூக்கத்தில் செய்த சபதங்கள்
புரட்டப்படாத மனப்புத்தகத்தில்
முடிவுரை எழுதாது நிறைவெய்தும்..?
ஒரு நொடிதானும் உனை மறக்கமுடியாத சுவாசம்
உனை மறந்து எப்படி உயிர்வாழ்வேன்
உயிர் பிரியும்வரை உனை எழுதுவதே
என் வேலையென அறியாயோ என் தமிழே உயிரே…❤️
❤️
❤️
பிரியங்களுடன்
ஆக்கம் ரதிமோகன்