எங்கள் மனங்களில் வாழும் மனிதன் அப்புக்குட்டி இவர் எங்கள் கலைஞன்!

வாழும் மனிதன் அப்புக்குட்டி எங்கள் கலைஞன்!
தோன்றிற் புகழொடு தோன்றுக.உண்மைதான்.பணத்தால்அடையாத புகழ் கலைஞனுக்கே வாய்த்திருக்கிறது.மக்களைச்சென்றடைகிற கலை வெளிப்பாடுகளை
மக்களிடம் சென்று சேர்க்கிற பொறுப்பிலிருந்து எவன் வழுவாமல் இருக்கிறானோ காலம் அவனுடன் கை கோர்த்து நடக்கும்.
இது என் அனுபவம்.
பலரை உதாரணம் சொல்லலாம்.
இங்கு நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு கலைஞன் நமது இராஜகோபால் அவர்கள்.மானிப்பாய் தொகுதியில் உள்ள பழம் பெருமை வாய்ந்த ஆனைக்கோட்டையில் தம்பையா தம்பதிகளுக்கு 04/10/1042இல் பிறந்த இராஜகோபால் அவர்கள் கலைஞராக அவர்களின் குடும்ப அங்கத்தவர்களும் காரணமாயினர்.
தன் ஆரம்பக் கல்வியை மானிப்பாய் அமெரிக்கன் மிஷன் பாடசாலையிலும்,பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் பயின்றார்.
மானிப்பாய் இந்துக் கல்லூரி நவாலி,சங்கானை,சுதுமலை,ஆனைக்கோட்டை போன்ற கல்வி,கலைகளில் பயின்றோர் வாழ்ந்த பகுதியும் கூட.
மேலும்,
மானிப்பாய் இந்துக் கல்லூரி என்றதுமே அங்கு கற்பித்த ஆசிரியர்கள்.அதிபர்கள்,மாணவர்கள் ஞாபகம் வருகின்றனர்.அதுவே சிறப்பு.
நாவாலியூர்.சோமசுந்தரப்புலவர்,சோ.இளமுருகனார்,,கலை அரசு‘.சொர்ணலிங்கம்,கலைஞர்.ஏ,இரகுநாதன்,நவாலியூர்.க.நடேசன்,அப்பச்சி.மகாலிங்கம்,பா.சத்தியசீலன்,இயக்குனர்.பாலன்,வானொலிக் கலைஞரும் இயக்குனருமான கே.எம் வாசகர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.பாடசாலை அதிபர்களின் ஊக்குதலால் பல கலிஞர்கள் அங்கு தோன்றியதையும்,அவர்கள் பின் நாளில் புகழ்பூத்தவர்களாகவும் மிளிர்ந்தார்கள் என்பதையும் மறக்கமுடியாது.
இன்னொரு சிறப்பு இவர் படித்த பாடசாலையில் பயின்ற இன்னொரு கலைஞர்.திரு.ஏ.ரகுநாதன் அவர்களின் மூலம் அமரர்.கலையரசு.சொர்ணலிங்கம்அவர்களின் தொடர்புகிடைத்தமையை பெருமையாகச் சொல்லிக்கொள்ளவதுண்டு.
மானிப்பாய் இந்துக் கல்லூரியின் வருடாந்த விழாவின் போது இல்லங்களிடையே நடாத்தப்படும் நாடகப்போட்டிகள் பிரசித்தம் வாய்ந்தவை.அங்கு பயின்ற பழைய மாணவர்களுடன்,பிரபல நாடக இயக்குனர்களும் வந்து நாடகங்களை பயிற்றுவிப்பர்.
அதனால் தான் நமது கலைஞரும் இப்போதும் பேசப்படும் படைப்பாளனாக,நடிகனாக,நண்பனாக வலம் வருகிறார்.
கொழும்புக்கு தொழில் நிமித்தம் வந்து சேர்ந்தாலும் இவருள் ஊற்றெடுத்தோடும் கலைத் தாகம் மேடை நாடகங்களுக்குள் தள்ளியது.மேலும் இவருக்காக காத்திருந்தது போல இலங்கை வானொலிக் கலைஞர்களுக்கான நேர்முகப் பரீட்சையிலும் பங்கு பறி தேர்ந்தெடுக்கப்பட்டு வானொலிக் கலைஞருமானார்.இலங்கை வானொலிக்குள் நுழைவது என்பதே முயற்கொம்பு என்றிருந்த காலத்தில் இவருக்கான காலம் வாய்த்தது.அங்கு நிறைய பயிற்சியும்,பல தேர்ந்த கலைஞர்களின் நெறியாள்கையிலும் நடிக்க ஏதுவாயிற்று.சில்லையூர்.செல்வராஜன்,கே.எம்.வாசகர்,வரணியூரான் போன்ற பலரின் ஆத்மார்த்தமான நெருக்கமும் மேலும் மெருகூட்ட வாய்ப்பளித்தது எனலாம்.கொழும்பில் கிடைத்த நட்பு வட்டமாக பலரை நினைவு கூர்ந்தாலும் மரிக்கார்.எஸ்.ராமதாஸ்,’உபாலி.சி.செல்வசேகரன்,பி.ஏச்.அப்துலஹமீட்,விஜயாள் பீற்றர்,மணிமேகலை.இராமநாதன்,கே.எஸ்.பாலச்சந்திரன்,சுப்புலட்சுமி காசிநாதன் என்று கலை உலக நண்பர்கள் கிடைத்தமையாலும் தன்னை நிலையாக காலூன்றி நிற்பதற்கு உதவின எனபதை மறுக்கமுடியாது.
யாழ்ப்பாணத்து பேச்சு மொழியினை வெறும் ஹாஸ்யத் துணுக்குகளாக்கி நகைசுவை என்ற போர்வையில் மக்களை சிரிக்க வைத்த காலங்களை மாற்றி தங்கள் குணச்சித்திர நடிப்பால் மக்களின் நெஞ்சங்களில் வாழும் கலைஞர்களாக இன்றும் மிளிரும் பலருள் அப்புக்குட்டி இராஜகோபாலும் ஒருவர்.
மேடை,வானொலி,திரைப்படம்,தொலைக் காட்சி என்று தன் வேர்களை ஆழ ஊன்றிய படி புகழ் பெற்றவர் பல விருதுகளுக்கும் சொந்தக்காரராகிறார்.கொழும்புக் கலையகம் 1968இலும்,1969இலும் முறையே ‚கலாவினோதன்‘,’கலாவித்தகன்‘ எனும் சிறப்புப் பட்டங்களை வழங்கிக் கௌரவித்தது.இலங்கைக் கலாச்சார அமைச்சு 1978இல் ‚நகைச்சுவை மன்னன்’எனும் பட்டத்தையும்,கொழும்புக் கலைவட்டம் 1978இல்’மண்வாசனைக் கலைஞன்‘ எனும் பட்டங்களையும் வழங்கி கலைஞனைக் கௌரவித்தது வரலாற்றுக் கடமையினைச் செய்த பெருமையினையும் அவர்கள் பெற்றுக்கொண்டனர்.
சக கலைஞனை நேசிப்பவர்.மூத்த கலைஞர்களை ஆழமாக மதிப்பவர்.இன்னும் எதிர்காலம் நல்ல கலைஞர்களை உருவாக்கித் தரவேண்டும் என்பதும் இவரது பிரார்த்தனையுமாகும்.
ஒரு நடிகனுக்கு குரல் வளம் அமையவேண்டும்.தரப்படுக்கின்ற பாத்திரங்களுடன் வாழ்ந்து நடிக்கவேண்டும்.கதா பாத்திரங்களும் அவருடன் ஒத்துழைக்கின்ற மாதிரி அமையவேன்டும்.இங்கு கலைஞர் இராஜகோபால் எல்லாம் பொருந்தியவாராக இருப்பது அவரின் திறமையை யாவரும் என்றும் காண்பதற்கும்,நேசிப்பதற்கும் ஏதுவாகியது.கொழும்பில் தொழில் நிமித்தம் வாழ்ந்தாலும் பல நாடகங்கள் நடிப்புக்கு களம் கொடுத்தன.அதனால் பாத்திரங்களுடன் வாழும் கலைஞனாகவும் மதிக்கப்படுகின்றார்.ஆரம்பத்தில் பெண் வேடமே பொருந்தி வந்தது.அக்காலத்தில் பெண்கள் வேடத்தில் ஆண்களே நடிக்கின்ற சூழல் இருந்தது.எனினும் பெண்களுடன் போட்டி போட்டபடி நடித்த ஆண் கலைஞர்களும் உண்டு.இவரும் முதலில் பெண் வேடம் போட்டு நடித்து பலரைக் கவர்ந்தார்.கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் பாராட்டையும் பெற்றிருந்தார்.அதற்கு தேரோட்டி மகன் உதாரணம்.
சமூக நாடகங்கள்,நகைச்சுவை நாடகங்கள் தவிர்த்து சரித்திர/வரலாற்று நாடகங்களில் ஜொலிப்பது சிரமமானது என்பது என் கணிப்பு.அக் காலச் சூழலுக்கு ஏற்ப தன்னை வடிவமைத்தபடி நடிப்பது சிரமமே.ஆனால் கலையும் கண்ணீரும் நாடகம் அவரின் நடிப்புக்கு சிகரம் வைத்தது போல் அமைந்தது.சிலை செய்யும் சிற்பியாக நடித்து மன்னனுக்காக சிலை செய்தபின்பு வேறு எவருக்கும் பயன்படக்கூடாது என்று மன்னன் சிற்பியின் கைகளை வெட்டி எறியக் கட்டலை பிறப்பிப்பதும்,அதில் கை வெட்டுண்ட சிற்பியின் கண்ணீர் பார்ப்போரையும் கண்ணீர் சிந்த வைத்ததாக நண்பர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்.
வரணியூரான் எழுதிய பல நாடகங்களில் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்தார்.நம்பிக்கை(டாக்டர்.கோவூரின்),கறுப்பு சிவப்பு,இரை தேடும் பறவைகள் எனப் பலவற்றைச் சொல்லலாம்.
அதே போல ‚மரிக்கார்’எஸ்.இராமதாஸ் அவர்களின் கோமாளிகள் கும்மாளம்,விண்வெளியில் கோமாளிகள், ரூப்பு தரா மஸ்தானா மக்களின் மனதில் இன்றும் நீங்கா இடம் பெற்றவைகளே.
முதன் முதலில் வெளி வந்த திரைப்படச்சுவடியான ‚தணியாத தாகம்’பின்னர் வானொலி நாடகமாக்கப்பட்ட போது அதில் சிறப்பாக பேசப்பட்டார்.
எவனொருவன் தன் மொழியில் உயிரோட்டாமாக பேசி நடிக்கமுடியுமாயின் அவன் பேசப்படுவான்.பாத்திரங்களாயும் வாழ்வர்.அதற்கு அப்புக்குட்டி ஒரு உதாரணம்.இன்றும் அப்புகுட்டி என்றால் ஞாபகத்திற்கு வருபவர் நம்து இராஜகோபால் அவர்கள் தான்.
இவருக்கு நிறைவான பயிற்சி பெற்ற கலைஞருமாவர்.மானிப்பாய் இந்துக் கல்லூரி சுந்தரர் இல்ல நாடகபயிற்சிகளும் உதவின.
வரணியூரான் நகைச்சுவை நாடகங்களிலிருந்து கொஞ்கம் மாறுபாட்டு நமது மொழியில் சமூக நாடகமாக தந்த ‚பாசச் சுமை‘ நம்மாலும் முடியும் என்று பறை சாற்றியது.அவர் தந்த டாக்டர் கோவூரின் நம்பிக்கை சிறப்பிடம் பெறுகிறது.கொழும்பில் மாத்திரமல்ல யாழ்ப்பாணத்தில் நான்கு இடங்களில் மேடையேற்றபட்டது.
சுமதி எனும் நாடகம் தினகரன் விழாவில் ஏழு விருதுகள் கிடைத்தமையை பெருமையாக சொல்வர்.
மேலும்,
முகத்தார் ஜேசுரத்தினம் அவர்களின் அனேக நாடகங்களில் நடித்தார்.மண்வாசனை எழுத்தாளர் அமரர்.ஜேசுரத்தினம் அவர்களின் நாடகத்தில் நடித்து இவரும் மண்வாசனை நடிகரானார்.அது மாத்திரமல்ல, மானிப்பாய் தந்த மற்றொரு கலைஞர் கே.எம்.வாசரின் அனேக நாடகங்களில் இவர் நடித்ததை இன்னும் மறக்க முடியாதவராகவே இருப்பது வியப்பைத் தந்தது.
மாதக் கணக்கில் வானொலியில் ஒலிபரப்பான ‚கோமாளிகள் கும்மாளம்‘ ‚கோமாளிகள்‘ எனும் பெயரில் திரைப்படமாக்கப்பட்டு நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.அதனைத் தொடர்ந்து ஏமாளிகள் திரைப்படமும் இவர் நடித்து வெளி வந்து அதிக நாட்கள் ஓடி வரவேற்பைத் தந்தது.
வானொலி நாடக இயக்குனர் கே.எம்.வாசகரின் சிறப்பான கவனிப்பு இவரை நல்ல வானொலிக் கலைஞராக்கியது.காற்றலைகளில் வந்த கலைஞனை திரைப்படங்களும் தாங்கின.நெஞ்சுக்கு நீதி,கோமாளிகள்,ஏமாளிகள் என்பவற்றைத் தொடர்ந்து கிராமத்துக் கனவுகள் தொலைக்கட்சித்தொடரிலும் நடித்தார்.ஈழத்தில் நாடகங்கள் என்றாலே பலர் ஞாபகத்திற்கு வருவர்.அதில் குறிப்பிடத் தக்கவர் அப்புக்குட்டி அவர்கள்.
இன முரண்பாடு,யுத்தசூழல் பலரை இடம்பெயர் வைத்தாலும் இன்னும் கலைத்தாகம் கொண்டவர்களாகவே காணப்டுகின்றனர்.பிரான்ஸ் வந்து சேர்ந்த கலைஞர் ஏ.பி.சி வானொலியின் நிகழ்சிக்கட்டுப்பாட்டாளராகவும் கடமையாற்றினார்.அவருக்கு இணையாக முத்தார் ஜேசுரத்தினம் அவர்களும் இருந்தார்.
பிரான்ஸ் என்றதும் கலைஞர்கள் சங்கமமாகிய ஓரிடமாகவே நான் நினைப்பதுண்டு.பலரைச் சொல்லலாம்.இன்று அவரின் கனவாகிய தன் வாரிசு என்று தயாநிதியைச் சொல்வது பெருமையாக நினைக்கத் தோன்றுகிறது.
வெவ்வேறு திசைகளில் கால/நேரச் சூழலில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் இன்றும் நட்புமறவாமல் அவர்களை நினைவு கூருவது அவரின் சிறப்பான பண்புகளில் இன்றாகும்.
கே.எஸ்.பாலச்சந்திரனின் ‚கிராமத்துக் கனவுகள்‘ தொலைக்காட்சிதொடராக வெளி வந்து திரையிலும் இவர் முகம் பதிந்தது.
ஈழ நாடக வரலாறு பதிவு செய்யப்படுகையில் இராஜகோபாலுக்குத் தனி இடம் ஒன்று உண்டு.அவருடன் கலந்து நடித்தவர்கள் தங்களுடன் இவரையும் மெருகேற்றினார்கள்.
இவர் நடித்த நாடகங்களில் ‚மனிதவலை‘,’நீ இல்லையேல்‘,’கறுப்பும் சிவப்பும்‘,’மஞ்சள் குங்குமம்‘,’நந்தனார்‘,’மனித தர்மம்‘,’காதல் ஜாக்கிரதை‘,’கலாட்டா காதல்‘,’அரிச்சந்திர மயானகாண்டம்‘,’சத்தியவான் சாவித்திரி‘,’காற்றோடு கலந்தது‘,’ஆலமரத்தடி வீடு‘,புரோக்கர் கந்தையா‘,’ஒரு அனாதையின் ஊர்வலம் எனப் பல..
கொழும்பு கமலாலயம் கலைக் கழகம்,சிலோன் சேவா ஸ்டேஜ்,நிழல் நாடக மன்றம் போன்ற அமைப்புகளின் நாடகங்களிலும் நடித்தார்.
நிழல் நாடகப் போட்டியிலும் பரிசு பெற்றிருந்தமை குறிப்பிடத் தக்கது.
அதை விட பாரிஸில் கலைஞர்.ரி.தயாநிதியின் ‚அவலங்களின் மறுபக்கம்‘,’காப்பகம்‘ போனற பிரதிகளில் நடித்தார்.இலங்கையில் இருந்த காலத்தில் பல மொழிமாற்ரப் படங்களுக்கு குரலும்(டப்பிங்)கொடுத்தார்.
இவரின் சேவையைப் பாராட்டும் விதமாக பாரிஸ் இலங்கைக் கலையகம் வானொலி/மேடை அறிவிப்பாளர்.எஸ்.கே.இராஜனின் ஊக்கத்தினால் ‚கலைக் கீர்த்தனன்‘ எனும் பட்டம் 1990 இல வழங்க்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து பாரிஸ் விழுதுகள் அமைப்பு 2001இல் ‚கலைஞானி‘ விருதினை வழங்கி கலை உலகு பெருமைப்படச் செய்தமை ஒரு வரலாற்றுப்பதிவாகும்.பாரிஸ் ஓ.ஆர்.ரி நிறுவனம் அவர்களின் ‚இராகசங்கமம்- 2008‘ நிகழ்வில் ‚ஈழத்தமிழ்விழி’எனும் சிறப்புப்பட்டம் வழங்கிக் கௌரவித்தமையை வாழ்நாளில் மறக்கமுடியாததாகவே கருதுகிறார்.அதைவிட புனித அந்தோனியார் முத்தமிழ்க் கலாமன்றம் வாழ்ம் கலைஞர்களை வாழும் போதே கௌரவிக்க எண்ணி வழங்கிய விருது ‚வானொலி நாடக தமிழ்முரசம்‘ ஆகும்.இவருக்கு இதனை பரிசுகள்/பட்டங்கள் போதாததாகவே காலம் கணிக்கும்.
அமரர்.கே.எம்.வாசகர் இல்லாவிட்டால் இன்று அப்புக்குட்டியை கண்டிருக்கமுடியாது.கூடவே அவருக்குக் கிடைத்த கலை நண்பர்கள்,கிடைத்த பாத்திரங்கள் கடவுளின் அனுக்கிரகமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஒருமித்த கலைஞர்களின் ஒருங்கிணைந்த சங்கம நிகழ்வு நிகழுமாயின் மீண்டும் ஒரு ஒரு கலைக் குடும்பத்தை சந்திப்பது போலிருக்கும்.வயது,நோய்,மரணம் பலரை இழந்திருந்தாலும் இன்றும் அவர்களின் பங்களிப்பை வரலாறு சேமித்துவைக்கும்.
இன்றும் வயது முதிர்வு தெரியாமல் கம்பீரக்குரல்/கணீர்க்குரலில் பேசக்கூடிய/பாடக்கூடிய நமது மண்வாசனை நடிகனிடம் இருந்து நிறைய எதிர்பார்த்து காலம் காத்திருக்கிறது.காலத்துடன் கலை உலகமும் தான்.
வாழ்த்துவோம்,