ஈழத்தின் கிளிநொச்சியில் இடம்பெற்ற ‚அலையின் வரிகள்‘ ஆழிப்பேரலை காணொளிப்பாடல் வெளியீடும், கருத்தமர்வும்.
26.12.2004 அன்று இலங்கை உள்ளிட்ட பல தேசங்களை உலுக்கிய ஆழிப்பேரலையின் பேரவலம் மானிடர்களை அதியுச்ச பல்வித இழப்பிற் தள்ளியது. ஆழிப்பேரலை அவலம் இடம்பெற்று முடிந்த பதினைந்தாவது ஆண்டு நினைவினை முன்னிட்டு படைப்பாளி வவுனியூர் ரஜீவன் வரிகளிலும் தயாரிப்பிலும், இசையமைப்பாளர் பி.எஸ்.விமல் இசையிலும், அபிநயா குரலிலும் உருவான ‚அலையின் வரிகள்‘ சுனாமி நினைவின் காணொளிப்பாடல் வெளியீடு, கருத்தரங்க நிகழ்வு என்பன 23.12.2019 திங்கட்கிழமை, காலை 09.00 மணிக்கு ஈழத்தின் கிளிநொச்சி மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. நிகழ்வுக்கு தேசமான்ய ‚கம்பீரக்குரலோன்‘ சி.நாகேந்திரராசா தலைமை வகித்தார்.
நிகழ்வில் வரவேற்பு, சுடர் ஏற்றுதல், அகவணக்கம் என்பன முறையே இடம்பெற்றன. வரவேற்பு நடனத்தினை கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவிகள் வழங்கினர். வரவேற்புரையினை திருமதி ரஜீவன் வழங்கினார்.
ஆசியுரைகளை ஒட்டுசுட்டான் நாகதம்பிரான் ஆலய ஜெயசுதக் குருக்கள், காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்பணி ஜோசுவா அடிகளார் ஆகியோர் வழங்கினர். தலைமையுரையினைத் தொடர்ந்து கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் த.முகுந்தன், கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்னாள் அதிபர் இரட்ணகுமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
‚அலையின் வரிகள்‘ காணொளிப் பாடல் இறுவட்டினை கரைச்சி பிரதேச செயலர் த.முகுந்தன் வெளியிட, முதலாவது பிரதியினை கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்னாள் அதிபர் இரட்ணகுமார் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பங்கேற்பாளர்கள் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
பாடற் பற்றிய நோக்கு, சுனாமியின் பின்னரான எழுகை பற்றி யோ.புரட்சி உரையாற்றினார். தொடர்ந்து பாடற்காட்சி இடம்பெற்றது. தொடர்ந்து கவிஞர் வன்னியூர் செந்தூரன், கவிஞரும் ஆசிரியருமான பொலிகையூர் சு.க.சிந்துதாசன் ஆகியோர் ‚சமகால நோக்கு‘ பற்றிய கருத்துரை வழங்கினர்.
ஏற்புரையினை படைப்பாளி வவுனியூர் ரஜீவன் வழங்கினார்.
பல்வித கருத்தரங்கோடும், காணொளிப் பகிர்வோடும் இடம்பெற்ற இந்நிகழ்வு மனதிற்கு ஆறுதலே. ‚அலையின் வரிகள்‘ பாடற் காணொளியானது முத்தமிழ் கிரியேசன் வெளியீடாக வெளிவந்துள்ளது. அனுசரணையினை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகம் வழங்கியிருந்தது.