„ இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த மனிதன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு அலையப் போகிறான்? இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை பண்ணிக்கொண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளைத் தொலைத்துவிட்டபின்பும் இன்னும் அதே நம்பிக்கையுடனேயே கடவுள் என்னும் கற்பனைவடிவத்துக்குத் தூப தீப ஆராதனைகளோடு கூடிநின்று கோஷமிட்டு கூச்சலிட்டு, பஜனை என்றும் பண்ணிசை என்றும் பாட்டுக்கள் பாடி, கரகம் என்றும் காவடி என்றும் கூத்துக்கள் ஆடி, கடவுளைக் காண்கிறோம் என்று கதை விட்டுக்கொண்டு இறுதியில் ஏதுமறியா வெறுமையினோடு விழிக்ளை மூடிக்கொண்டு.. வாழ்க்கைப் பயணம் முடிந்து விடுகிறது.
„கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்!“ என்று இவர்கள் கதைபண்ணிக்கொண்டிருக்கும் கடவுள் ஒருபோதும் இவர்கள் கண்ணெதிரில் வந்ததற்கான எந்தச் சான்றும் இல்லை. இருக்கும்போது வாராத கடவுள் இறந்தபின்தான் வந்து ஆண்டருள்வான் என்றால் நம்பமுடிகிறதா?“
இறைவன் தொண்டுக்கென்றே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதிக்கொண்டு அலைந்தார்களே அன்றி அவர்களால் நேசிக்கப்பட்ட அந்தக் கடவுள் அவர்களுக்கு காட்சி தந்ததற்கான எந்தத் தரவுகளும் இல்லை.
அவனவன் கற்பனைகளுக்கேற்ப ஆயிரமாயிரமாய்க் கதைகள். அதிலும் பாதிக்குமேல் மனிதர்களைப் பரவசத்திலாழ்த்தும் பாலியல் கதைகள்.. கடவுளுக்கு மனிதனைப்போல் உருவத்தை வடிவமைத்து தத்தம் ஆசாபாசங்களுக்கேற்ப அவனைச் சித்தரித்து, இதுதான் கடவுள் வந்து தொழு! என்றால் இது பகுத்தறிவுக்குள பொருந்தக் கூடியதாகவா இருக்கிறது?
– கேள்விகள் நீண்டு கிடக்கின்றன.
விடை தேடிச் சலித்துப்போனவன் கண்ட ஒரே விடை:-
„கடவுள் என்று எதுவுமே இல்லை!“
கடவுளே இல்லை என்று முடிவெடுத்துக் கொண்டவன் உலகவாழ்வுக்கான தன் தேடல்களில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறான். வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறான். வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் மகிழ்வோடிருப்பதாகவும் தோற்றம் காட்டுகிறான்.
கடவுள் இருக்கிறான் என்று நம்பிக்கொண்டிருப்பவனோ உலகவாழ்வுக்கான தன் தேடல்களைத் தவிர்த்து, „எல்லாம் அவனருள்!“ என்று காத்திருக்கத் தொடங்குகிறான்.
„கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!“ என்பதைக் கருத்தில் கொள்ள மறந்து விடுகிறான்.
கடவுள் இல்லை என்பவன் உல்லாசமாக வாழும்போது கடவுளை நம்பிய நான் கவலைகளில் மூழ்கிக் கிடக்கிறேனே என்று உள்ளம் வெதும்புகிறான்.
„செய்யும் தொழிலே தெய்வம்!“ என்று முன்பெல்லாம் உழைப்பாளிகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இப்போதோ தெய்வத்தை செய்வதே தொழிலாயிற்று.
„உன் கஷ்டம தீரவேண்டுமா? இல்லாத கடவுளை எங்கே என்று தேடிக் கொண்டிருக்காதே. இதோ தெய்வம் என்று ஒரு கோயிலைக்கட்டு அதுதான் இப்போதைக்கு வருமானம் தரும் சிறந்த தொழில்“
– பகுத்தறிவுவாதிகள் என்று தம்மைச் சொல்லிக்கொள்ளும் மனிதர்கள் ஆன்மீகவாதிகளுக்கு விடுக்கும் நற்செய்தி இது.
அவர்களைப் பொறுத்தவரை தெய்வம் என்பது கேலிக்குரியது. சடங்குகள் சம்பிரதாயங்கள் பிரார்த்தனைகள் யாவும் கேலிக்குரியன.
ஆனால் எல்லா ஆன்மாக்களிடத்தும் இறைவன் இரண்டறக் கலந்திருக்கிறான் என்ற உண்மையை அவர்களே அறியாமல் அவர்களே நிரூபிக்கிறார்கள் என்பதுதான் இதில் ஆச்சரியத்துக்குரியது.
„கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் என்று எதுவுமே இல்லை!“ என்று முழங்கிய மனிதன் அவனது இறப்புக்குப் பிறகு அவனைப் பின்பற்றுபவர்களால் கடவுளாக்கப்படுகிறான்;. அவனை சிலையாக்கி மாலை அணிவித்து வணக்கம் செலுத்தி தீபாராதனை செய்து அவன் உயிரோடிருந்தவரையில் இவர்களுக்குக் காட்சிதராத – அவனுள் இருந்த – கடவுளை இவர்கள் இப்போது வணங்கவைத்துவிடுகிறான்.
„நான் யார்;?“ என்ற கேள்விக்கு விடை: „நான் ஆன்மா!“
„ஆன்மா என்றால் என்ன என்ற கேள்விக்கு விடை: „அது கடவுள்!“
நான் என்பது இந்த உடம்புதான் என்று எண்ணிக்கொண்டிருக்கும்வரை என்னுள் இருக்கும் நானாகிய ஆன்மா என் கண்களுக்குப் புலனாவதில்லை. என்னைக்கடந்து என்னுள் போய் என்னைக் கண்டுகொள்ளும்போதுதான் நான் கடவுள் என்பது எனக்குத் தெளிவாகிறது. என்னைப் போலவே நீயும் அதை உணரலாம்.
இந்த உடல் என்பது இந்த மண்ணில் ஒரு துகள்தான்.
எனது உடலை விந்தெனக் கொண்டலைந்த எந்தையும், அதைத் தன் கருவில் தாங்கி உருக்கொடுத்து வளாத்து இந்த மண்ணில் தவழவிட்ட என் தாயும் இந்த உடலின் மூலாதாரம்:
இந்த உடலுக்குள் வாசம்செய்யும் நானாகிய ஆன்மாவும் அவர்களது ஆன்மாக்களின் தொடர்ச்சியே. என் ஆன்மா தெய்வமென நான் உணர்ந்தபோதே என் பெற்றவர்களும் தெய்வமே என்று என்னால் உணரப்பட்டார்கள்.
அவர்கள் உடலால் மறைந்தாலும் என் ஆன்மாவோடுதான் வாழ்கிறார்கள்.
இப்போது அவர்கள் உடலளவில் என்னருகே இல்லை என்பதால் நான் பெற்றோரே இல்லாதவன் என்று பெருமைப்பட்டுக்கொள்ள முடியுமா?
நான் இருக்கின்றவரையில் அவர்களும் இருப்பார்கள்.
நான் இல்லாதபோது அவர்களும் இல்லை.
கடவுள் இல்லை என்று மறுப்பவர்கள் தம்முள் இருக்கும் தம்மை உணராதவர்கள்.
இல்லாத கடவுள் இருக்கின்ற மனிதர்களுக்குள் ஒளிந்துகொண்டிருப்பது ஒருநாள் தெளிவாகும்போது இருக்கின்ற மனிதர்கள் இல்லாதவர்களாகி இருப்பார்கள்
பத்திலனேனும் பணிந்திலனேனும் உன்
உயர்ந்த பைங்கழல் காணப்
பித்திலனேனும் பிதற்றிலனேனும்
பிறப்பறுப்பாய் எம்பெருமானே
முத்தனையானே மணியனையானே
முதல்வனே முறையோவென்று
எத்தனையானும் யான் தொடர்ந் துன்னை
இனிப்பிரிந் தாற்றேனே!
(மாணிக்கவாசகர்- திருவாசகம்)
பிரசுரம். சிவத்தமிழ் தை-2019