1970களில் இலங்கைவானொலியில் இசையும் கதையும், ஒலிமஞ்சரி, சனிக்கிழமை இரவுநேர நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நேயர்கள்மத்தியில் அதிக வரவேற்புப் பெற்றுக் கொண்டிருந்தவேளை-வர்த்தகசேவையில் வாராந்த விளம்பர நிகழ்ச்சி ஒன்றிற்கென நவரசக்கோவை என்ற கால்மணிநேரநிகழ்வொன்றைத் தயாரித்து வழங்கத் தொடங்கியிருந்தார் பிரபல அறிவிப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீத் அவர்கள்.கதையாகத் தொடங்கி நாடகமாக வளர்ந்து கதைக்குப் பொருத்தமான 3 திரைப்படப் பாடல்களின் சிலவரிகள் மட்டும் இணைந்த இசைக்கலவையுடன் அந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டிருக்கும்.இவை அனைத்தும் 10நிமிடங்களுக்குள் அடங்கத் தக்கனவாக எழுதப்படவேண்டும்.சிறுகதை ஒன்றின் நாடகவடிவம் அல்லது நாடகம் ஒன்றின் சிறுகதைவடிவம் என்பதுபோல் அமைந்த இந்தப் படைப்பை சிறுகதை நாடகம் என அறிமுகப்படுத்தியிருந்தார் அவர்.இந்த நிகழ்ச்சிக்கென நானும் சில பிரதிகளை எழுதி அனுப்பியிருந்தேன். அவர் எதையும் தவிர்க்காமல் எல்லாவற்றையுமே தயாரித்து ஒலிபரப்பினார். எழுத்தாளர்களின் கற்பனைத் திறனுக்கு களம் அமைத்துக்கொடுத்த நிகழ்வாக அது அமைந்திருந்தது எனில் அது மிகையல்ல.ஜேர்மனியில் பூவரசு ஆண்டு விழாக்களின்போது ஒவ்வோர் முறையும் வித்தியாசமான கலைவடிவங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என விரும்பினேன். தாளலய, இசை நாடகங்களே இளையோரைக் கவர்வனவாகவும் அவர்களால் இலகுவில் பயிற்சிபெறத் தக்கனவாகவும் அமைந்தன. அதேநேரம் முழுநேர நாடகங்களையும் பெரியவர்கள் பங்குபற்றும்விதமாக எழுதினேன். சிறுகதைநாடகம் ஒன்றை அரங்கேற்றும் எண்ணம் எழுந்தது.எனது சிறுகதையொன்றினை நாடகமாக்கி அத்துடன் சில திரைப்படப் பாடல்களையும் இணைத்து அதையே சிறுகதைநாடக வடிவில் அரங்கேற்றினேன். (1996இல்) பின்னர் 2001இல் பூவரசு 10வது ஆண்டு நிறைவு விழாவில் எனது நிழலில் என்னும் சிறுகதையை சிறுகதைநாடகமாக இருட்டு மனங்கள் என்னும் பெயரில் அரங்கேற்றினேன்.அதன் காணொளி வடிவத்தை உங்கள் பார்வைக்காகத் தொகுத்தளிக்கிறேன். சிறுகதைநாடகம் என்னும் புதுவடிவத்தை இலங்கைவானொலியில் அறிமுகப்படுத்தி எனது நாடகங்களுக்கும் இடமளித்து என் எழுத்துக்கள் தொடர ஊக்கமளித்த பிரபல அறிவிப்பாளரும் என் இனிய நண்பருமான திரு. பி.எச்.அப்துல்ஹமீது அவர்களுக்கு நன்றி.