இயற்கையின் ஓலம்
உயிர்வாழ உனக்களித்தக்
காற்று மாசுபடுவதும்
மனிதா உன்னால் தானே ?
பொழிகின்ற மழைநீரை
சேமிக்காமல் என்மீது
பழிசுமத்துவதும் நீதானே ?
சீர்செய்யாது சீரழித்து
தூர்வாராது ஏரிகுளங்களை
நிலமாக்கியதும் நீதானே ?
அணைக்கட்டி ஆழப்படுத்தி
நீர்நிலைகள் உருவாக்காமல்
மாடிகளாய் மாற்றியதும் நீதானே ?
நிழல்தந்து உயிரனங்களின்
நெஞ்சங்களை குளிர்விக்கும்
மரங்களை வெட்டியதும் நீதானே?
நீவாழ்ந்திட யாமளித்த
கணிமங்களை அழித்திடும்
கல்நெஞ்சு மானிடனும் நீதானே ?
இயற்கையின் கொடையை
இதயமின்றி புறக்கணித்தால்
இனி வாழவும் வழியேது ?
நிந்திக்காமல் சிந்திப்பாய்
நித்தமொரு அறிவுரையா
நீயெழுதும் கவிதைகளில்
நீள்கிறது வரிகளுமென !
பொதுநல சிந்தனையே
பொழுதும் என்நெஞ்சில்
மொழிவதும் என்கடமை
மெய்யிதும் உரைப்பது !
இயற்கையைக் காப்போம்
தலைமுறைத் தழைத்திட
தவறேதும் இழைக்காமல்
இன்பமுடன் வாழ்வோம் !