„இந்த உலகம் நமக்குச் சொந்தமா? அல்லது இந்த உலகத்துக்கு நாம் சொந்தமா?“
„நாம் உயிர்வாழும்வரை இந்த உலகம் நமக்குச்சொந்தம்! அதற்குப் பின்னால் இந்த உலகத்துக்கு நாம் சொந்தம்!“
எப்போதோ கேட்டறிந்த ஒரு கதை என் நினைவுக்கு வருகிறது.
ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு பரந்த நிலப்பரப்பைக் காட்டி ஓர் அரசன் தன் குடிமக்களுக்கு ஓர் அறிவிப்புச் செய்தான்.
„இந்த நிலப்பரப்பு முழுதும் உங்களுக்கே சொந்தமாக்கப்படும். ஆனால் ஒரு நிபந்தனை உங்களில் யார் எவ்வளவு தூரம் இந்த நிலப்பரப்பை ஓடி முடிக்கிறீர்களோ அந்தளவு நிலப்பரப்பு மட்டுமே உங்களுக்குச் சொந்தமாக்கப்படும்!“
ஓடியவர்கள் யாவரும் தத்தமது ஓட்டத்துக்கேற்ப தமக்குரிய நிலப்பரப்பைப் பெற்றுக் கொண்டார்கள்.
பேராசை கொண்ட ஒரு மனிதன்மட்டும் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருந்தான். மீதமிருக்கும் பெருமளவிலான நிலப்பரப்பை முழுதுமாய்க் கைப்பற்றிவிடவேண்டும் என்ற வெறி அவனுக்கு. இன்னும் இன்னும் என்று ஓடிக்கொண்டேயிருந்தவன் பெருமளவு நிலப்பரப்பைக் கைப்பற்றியும் திருப்தியுறாமல் தொடர்ந்தும் ஓடினான். மாரடைத்துக் கீழே விழுந்து மரணித்துப் போனான்.
இனி அவனுக்கு அந்தப் பரந்த நிலம் தேவையில்லை. ஓர் ஆறடி நிலமே போதுமானது.
-இது வெறும்கதையல்ல. நிஜம் என்று பிரதிபலித்துக்காட்டும் பல்வேறு சம்பவங்கள் நம் கண்ணெதிரிலேயே சம்பவித்துப் போவதை நாம் காணத்தான் செய்கிறோம்.
கோடிகோடியாய்க் குவிக்க நினைத்தவர்கள் – குவித்தவர்கள்- வாழ்வு குறுகிய சிறைக்கம்பிகளுக்குள் முடங்கிப் போகிறது.
இன்னநேரத்தில் பிறப்பு இன்ன நேரத்தில் இறப்பு என்பதுமட்டுமல்ல இவ்வளவுதான் உன் கணக்கு என்று ஒவ்வொருவர் வாழ்வும் இயற்கையால் ஏற்கனவே குறிக்கப்பட்டாயிற்று.
இயற்கையின் கணக்கிலிருந்து தப்பமுடியாமல் போனாலும் நமது வாழ்வை நாமே வாழ்ந்தாக வேண்டும் என்பதையும் இயற்கையே நமக்குக் கற்பித்திருக்கிறது.
இந்த உலகம் உன்னைப் பாராட்டுகிறதா?
இந்தப் பாராட்டு என்பது உன்னிலிருந்தே உருவானது
இந்த உலகம் உன்னை இழிவுபடுத்துகிறதா?
இந்த இழிவும் உன்னிலிருந்துதான் உருவானது.
எதுவாக உன்னை நீ உருவாக்கிக் கொண்டாயோ அதைத்தான் இந்த உலகமும் பிரதிபலித்துக்காட்டுகிறது.
புகழ்ச்சியும் இகழ்ச்சியும் அவற்றின் விளைவான இன்ப துன்பங்களும் வெளியிலிருந்து வருவனவல்ல. அவை உன்னுள்ளேயே அடங்கியிருக்கின்றன.
உனக்குத் தரப்பட்ட வாழ்வை நம்பிக்கையோடு தொடர்வதோ அல்லது அவநம்பிக்கைக்கு ஆளாகி அதை நீ இழப்பதோ உனது பொறுப்பில்தான் உள்ளது.
உன் வாழ்க்கையில் பங்குகொள்ளும் உறவுகளோ உற்றம் சுற்றமோ உன்னிலிருந்து பெற்றதைத்தான் உனக்குத் திருப்பித்தருகின்றனர்.
நீ அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தால் அவர்களும் அதைத் திருப்பி உனக்குத் தருகிறார்கள். நீ அவர்களுக்குத் துன்பத்தைக் கொடுத்திருந்தால் அதையே அவர்களும் திருப்பி உனக்குத் தருகிறார்கள்.
இரந்து வருபவனுக்கு இல்லை என்று நீ சொல்லும் போது உன்னைக் கருமி என்பதும் நீ வாரிக் கொடுப்பவனாயிருந்தால் உன்னை வள்ளல் என்று புகழாரம் சூட்டுவதும் இந்த உலகம்தான் என்று நீ நினைத்துக்கொண்டிருக்கிறாய்.ஆனால் உண்மை அதுவல்ல.
உலகம் சொல்லும் கருமியோ வள்ளலோ உன்னிலிருந்துதான் வெளிப்படுகிறார்கள். உன்னை உள்ளபடியே காட்டும் கண்ணாடியாக இந்த உலகம் செயல்படுகிறது அவ்வளவுதான்.
„நான் எவ்வளவோ நன்மைகளைச் செய்தாலும் இந்த உலகம் என்னை நல்லவனாகக் கருதுவதில்லையே. எவ்வளவோ கொடுமைகளைச் செய்பவனைமட்டும் இந்த உலகம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறதே!“ என்று உன்மீது நீ பச்சாதாபப்பட்டுக் கொள்ளும்போது இந்த உலகத்தை நீ புரிந்துகொண்டிருப்பதுபோன்ற ஒரு மாயைக்குள் நீ சிக்கிக்கொள்கிறாய்.
உண்மையில் கொடியவர்களை இந்த உலகம் கொண்டாடியதில்லை என்பதைக் காலம் நமக்குக் கற்பித்துக்கொண்டேயிருக்கிறது. நல்லவர்களை நன்றி மறக்காமல் காலகாலத்துக்கும் இந்த உலகம் அவர்களை நினைவுகூர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்த உலகத்தால் வெறுக்கப்படும் ஒருவனாக மாறிவிடநேர்ந்தால் அதற்காகக் கவலைப்பட்டுக் காலத்தை வீணடிக்காமல் உடனடியாகவே தன்னைத்தான் சுயவிசாரணை செய்து கொண்டாகவேண்டும்.புரியாதிருந்த பல உண்மைகள் அபபோது புரிய ஆரம்பித்துவிடும்.
மற்றவர் எப்படிப்பட்டவர் என்பதை ஆராயத்துணியும் மனிதமனம் ஒருபோதும் தன்னைத்தான் ஆராயத் துணிவதில்லை என்பதே உலகத்தின் பெரும்பாலான துன்பங்களுக்கு மூலகாரணமாகிவிடுகிறது.
இந்தத் துன்பங்கள் எவரால் விளைந்தனவோ அவர்களையே அது திருப்பித் தாக்கத் தொடங்கிவிடுகிறது.
உலகம் எப்படியிருக்கிறது என்னைப்பற்றி அது என்னகருதுகிறது என்ற கேள்விகளுக்கு விடைகாண்பதற்கு முன்பே, நான் எப்படியிருக்கிறேன்? என்னைப்பற்றிய எனது அபிப்பிராயங்கள் எவை? என்ற கேள்விகளுக்கு விடைகண்டாகவேண்டும்.
அழுக்கடைந்த ஆடைகளை அணிந்துகொண்டு கண்ணாடியின்முன் போய்நின்றுகொண்டு அது என்னைத் தூய்மையாகக் காட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தனை முட்டாள்தனமோ அதேபோன்றதே என்னைப் பற்றி நான் சரியான தெளிவுபெறாமல், இந்த உலகம் என்னை இப்படிக் கருதிவிட்டதே என்று முரண்பட்டு நிற்பதும்.