இந்தத்தாயின்ஏக்கம்தீருமா?
என்பிள்ளைகள்வந்துசேருமா?
உறவைத்தேடியே
விழித்தபடி கண்கள்
சிறகை விரித்துப்போன
பிள்ளைகளை
நினைத்தபடி நெஞ்சம்
பெற்றவள் மனமோ
பாசத்துக்கு ஏங்குது
பிள்ளைகளோ
பாசம் மறந்து போனது
என்ன கொடுமையான காலமோ
என்னதான் இந்த வாழ்க்கையோ
என்றாவது ஒருநாள் வருவீர்கள்
என்றுதான் வாசலில் காத்திருக்கிறேன்
என் உயிர்போவதற்க்குள்
வருவார்கள் என்ற நம்பிக்கையில்
பிள்ளைகள் வரவை பாத்திருக்கின்றேன்
காசுபணம் தேவையில்லை
உங்கள் முகம் மட்டும் காணவே
காத்திருக்கிறேன்
தீபாவளி பொங்கலுக்காவது
வருவீர்களோஇந்தப்பாசக்கிழவி
பொங்கியதை சாப்பிடவருவீர்களோ
என்முந்தானையில் முடிஞ்சு
வைச்சிருக்கும் கிளிஞ்சகாசை
உங்களிடம் தரவே காத்திருக்கிறேன்
வருவீர்களோ வந்து ஒருவார்த்தை பேசுவீர்களோ
இந்தக்கட்டை கண்மூடமுன்னே
என்ரை பிள்ளைகளை ஒருக்கா
பாக்கவே மனம் ஏங்குதே தவிக்குதே
வீடோ பாழடைந்து போகுது
உடலோ சோர்வடைந்து போகுது
பாசம் மட்டுமே நெஞ்சில்
நிறைஞ்சு கிடக்கு
உங்களைக்காணாமல்
என்னுயிர் போகவே போகாது
வாசலிலே காத்திருப்பேன்
உங்களைப்பாத்திருப்பேன்
வருவீர்களோ என்ரை செல்வங்கள் என்னைத்தேடி
பாசத்தை மறந்து
வேஷம் போட்டு போனவர்களே
இந்தப்பாசக்கிழவி
பாடையிலை போகமுன்னே
வந்துடுங்கோ
உங்கள் பாசத்தைக்காட்டுங்கோ
மூச்சுப்போனபின் வந்து
பேசிப்பயனில்லை
ஊருக்காக வெளிவேஷம் காட்டி
தூக்கிப்போகத்தேவையில்லை
எட்டும் அந்தியட்டியும்
பலலட்சம் கொட்டிப்பவர் காட்டத்தேவையில்லை
ஆண்டுமலரும் அம்மாவின் படமும்
போட்டு அலங்கரிக்கவேண்டாம்
உயிரோடு இருக்கும்போது
என்ரைஏக்கத்தை தீருங்கள்
பாசத்தைக்காட்டுங்கள்
(மயிலங்காடு இந்திரன்)