இதுதானா உலகம்???கவிதை.ரதிமோகன்

பசிப் பட்டினியில்
உயிரிங்கு துடிக்கிறது
பக்கத்து தெருவிலே
பல்லாக்கில் ஊர்கோலம் போகிறது.

அழுத பிள்ளை அம்மணமாய்
ஆடைக்கு தவிக்கிறது
புடவைக்கடை பொம்மைகளோ
பட்டுடுத்தி சிரிக்கிறது..

கோட்டிலே மூன்றுமுடிச்சு
அவிழ்க்கப்படுகிறது
வீட்டிலே மூன்றுமுடிச்சுக்கு
முப்பது ஏங்குகிறது..

காதலெல்லாம் கவிதையில்
கற்கண்டாய் சுவைக்கிறது
நிஜத்திலோ வேப்பங்காயாய்
கசக்கிறது…

ஆலயங்களில் அமைதிக்கு
ஆராதனைகள் நடக்கிறது
வீதிகளிலோ மதத்தின் பேரால்
வாய்ச்சண்டை நிகழ்கிறது..

பண்பாடு பாரம்பரியம்
பழசுகள் முழங்குகிறது
பரந்த வெளியில் வக்கிர
வன்புணர்வு நடக்கிறது…

போர் ஓய்ந்த பூமி என்று
அகதிகள் ஏற்பில்லை
போரின் எச்சங்களோ இன்னும்
தலைமேல் காயவில்லை..

விதி விரித்த வலைக்குள்ளே
தமிழன் தலை உருளுகிறது
பேனாவோ வார்த்தையின்றி
அழுகிறது…

ஆக்கம் ரதிமோகன்