இணுவை சக்திதாசனின் செவ்வரத்தம்பூ

என் வீட்டு முற்றத்தில் 
நான் நட்ட செவ்வரத்தை – தன் 
நன்றியினைக் காட்ட 
தினமும்
புன்னகையாய் பூத்தபடிதானிருக்கும்
பல்லு தீட்டுதல் 
முகம் கழுவுதல் எல்லாம் ….
அதை பார்த்தபடிதான் 
புரியா மொழியில் என்னோடு பேசும் 
புரிந்தது போல் 
நானும் வெட்கம் கொள்வேன்
சிலவேளைகளில் 
முகமூடித் திருடர்கள் பூவை 
பிடுங்கி சென்றுவிடுவார்கள் – அன்று 
முழுக்க விடியா மூஞ்சிதான்
காவலிருந்து ஒருநாள்..
கையும் களவுமாய் 
பிடித்து விட்டேன் – பின்னர் 
அம்மா வந்து 
பிணையில் விடுவித்தார் அவர்களை
சாமிக்காக கூட பிடுங்க விடமாட்டேன் 
சாமியாக பார்த்தேன் .. தினம் 
அதை சுற்றியே வந்து 
அழகை ரசித்தேன்
கண்ணுக்குள் புகுந்த ஒளி 
மனசுக்குள் இரசனை
பண்ணுமென்றால்தான்
அவன் ரசிகன் 
இல்லையேல் பார்வையிருந்தும் 
இல்லாததும் ஒன்றே
ஆமி வருகுதென்று 
ஊரோடு ஊராய் ஓடிய நாளோடு
வெறிச்சோடி போனது 
பூ மரமும் என் மனமும்!