இசைப்புலவர் ந. சண்முகரத்தினம் சிறுகுறிப்பு

இசைப்புலவர் ந. சண்முகரத்தினம்

சிறுகுறிப்பு
பிறப்பிடம் : உடுவில்
தந்தையார் பெயர் : நவரத்தினம்
சிறப்பு : வாய்ப்பாட்டு
மண்ணுலகில் : 1915 – 1987

இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இசை முன்னோடிகள்

ஈழத்தின் வாய்ப்பாட்டுக் கலைஞர்களுள் மூத்த கலைஞராக குறிப்பிடத்தக்கவர் இசைப்புலவர் ந. சண்முகரத்தினம் அவர்கள் ஆவார். இவர் ஈழ யாழ்ப்பாணத்து உடுவிலை பிறப்பிடமாக கொண்டவர். இவருடைய தந்தையார் நவரத்தினம் அவர்கள். தாயார் திலகவதி. இவர் 1911ம் ஆண்டு ஆனி மாதம் 21ம் திகதி பிறந்தார்.

இவருக்கு சிறுவயதிலேயே இசையார்வம் இருந்தது. இதற்கு காரணம் இவர் வசித்து வந்த சூழலும் இவருடைய பாட்டனார் பெற்றோர் ஆகியோர் இசையில் ஆர்வலராக இருந்தமையும் ஆகும். இதன் காரணமாகவே இவரின் பாட்டனார் பேரன் சண்முகரத்தினத்தை இவரின் ஏழாவது வயதில் இந்தியாவிற்கு அழைத்துச்சென்று திருநெல்வேலி ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதரிடம் வாய்ப்பாட்டு இசை கற்கவும், ஜமீந்தார் பாடசாலையில் கல்விகற்கவும் ஏற்பாடு செய்தார். இக்காலத்திலே அவ்வூரிலேயே சுந்தரபாகவதரிடம் பக்தி இசைப்பாடல்களையும் ஓரளவு கற்றுக்கொண்டார். 1926ஆம் ஆண்டு மீண்டும் ஈழத்துக்கு வந்த திரு. சண்முகரத்தினம் யாழ் இந்துக்கல்லூரியில் சிரேஷ்ட வகுப்புவரை கல்விகற்றுக்கொண்டே தனது இசைக்கல்வியை இங்கும் தொடர்ந்தார். இசையார்வத்தின் காரணமாக மலாயா நாட்டில் தனக்குக் கிடைத்த அரச உத்தியோகத்தை விரும்பாதவராய் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று ‘சங்கீதபூஷணம்’ பட்டப்படிப்பை மேற்கொண்டு அதிலும் முதலாம் தரத்தில் சித்தி பெற்று இசைக்கான தங்கப்பதக்கத்தையும் பெற்றுச் சாதனை படைத்தார்.

திரு. சண்முகரத்தினம் பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில் தனது இசை ஞான சிறப்பினால் தண்டாயுத தீஷிதர், பொன்னையாபிள்ளை, டைகர் வரதாச்சாரியார், திருப்பாம்புரம் சுவாமிநாதபிள்ளை, சித்தூர் சுப்பிரமணியபிள்ளை ஆகிய இசைமேதைகளிடம் தனிப்பட்ட முறையில் இசை நுணுக்கங்கள் பலவற்றையும் கற்றார். இந்நிலையில் திருச்சி வானொலிக் கலைஞர் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பல ஆண்டுகளாக இசை நிகழ்ச்சிகள் பல செய்துள்ளார். இவருடைய இசையில் சுருதிலய நுணுக்கங்கள் சிறப்பானது. திரு சண்முகரத்தினம் தனது பட்டப்படிப்பை முடித்து ஈழத்திலுள்ள பரமெஸ்வராக்கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி, பண்டத்தரிப்பு மகளீர் கல்லூரி ஆகியவற்றிலும் மட்டக்களப்பு சிவானந்தாக்கல்லூரியிலும் இசையாசிரியராக கடமைபுரிந்து மாணவர்களுக்கு இசைக்கல்வியை போதித்துள்ளார். இது மட்டுமன்றி இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் முதலாந்தர இசைக்கலைஞராக இசையரங்கு நிகழ்ச்சி அளித்தும் வானொலியில் இசைப்பயிற்சி, பண்ணிசைப்பயிற்சி ஆகிய மாதிரி வகுப்புக்களை நிகழ்த்தியும் உள்ளார். “நாதம்” என்ற மாத இதழை சில ஆண்டுகளாக வெளியிட்டு அருந்தொட்டாற்றினார். சிங்கப்பூர், மலேசியா வானொலியிலும் அநேக இசையரங்குகள் நிகழ்த்தியுள்ளார்.

இவர் 1943ஆம் ஆண்டில் தனது மாமனாரின் மகளான ஜெயலட்சுமி என்பவரை திருமணம் செய்தார். அதன் பின்னர் உடுவில் பகுதியில் 1948ஆம் ஆண்டளவில் இசைமன்றம் அமைத்து விழாக்கள் நடத்தியும், இசைவகுப்புக்கள் நடாத்தியும் இசையை வளர்த்துள்ளார். ஈழத்தின் பலபாகங்களிலும், சபாக்கள் நடைபெறும் இசையரங்குகள் பலவற்றிலும், இந்துக் கோவில்கள், திருமண வைபவங்கள், பண்ணிசையரங்குகள் போன்றவற்றிலும் இசை நிகழ்ச்சியினை நடாத்தியுள்ளார். இவருடைய சாரீர வளத்தினை “வெண்கலக்குரல்” என்று இரசிகர்கள் விமர்சித்துள்ளனர். இவர் மிருதங்கம் வாசிப்பதில் ஓரளவு திறமையுள்ளவர். மருமனாமடத்திலுள்ள கலையரங்கத்தை அமைப்பதற்கு இவரே முன்னின்று பாடுபட்டு உழைத்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவருடைய பிள்ளைகள் அறுவர். அவர்களுள் மூத்த மகன் சண்முகராகவன் தந்தையிடமே இசைபயின்று தந்தையாருடன் இணைந்து பல கச்சேரிகளை செய்தும் வந்துள்ளார். தற்பொழுது சண்முகராகவன் இலங்கையிலும், மலேசியாவிலும், அவுஸ்திரேலியாவிலும், புகழ்மிகக் இசைக்கலைஞனாக விளங்குகின்றார். இளைய மகன் பிரணவநாதன், தந்தையாரிடம் மிருதங்கம் பயின்று, பின்னர் “சங்கீதரத்தினம்” பட்டம் பெற்றும் தந்தையாரின் இசையரங்குகளில் மிருதங்கம் வாசித்துப் பாராட்டுப்பெற்று தற்போது ஜேர்மனியில் மிருதங்க இசை பரப்புகின்றார்.
கலைஞர் சண்முகரத்தினம் அவர்களுக்கு நம் ஈழநாட்டிலே 2-4-1971 இல் குறிப்பிடும்படியான ஒரு நிகழ்வு நிகழந்தது. மருதனார்மடம் அப்புக்காத்து திரு. சதா. சிறீநிவாசன் அவர்கள் இல்லத்தில் நடந்த இசையரங்கில் “சாவேரி” இராகத்தை பாடிய இவரை வீணாவிபூஷன் எஸ். பாலச்சந்தர் வெகுவாக பாராட்டிய நிகழ்வுதான் அது. சமகாலத்திலேயே இவர் இராமநாதன் நுண்கலைக்கழகத்தின் இறுதிப் பரீட்சைகளுக்கும், வடஇலங்கை, சங்கீத சபையின் இசை, மிருதங்கம் ஆகிய பரீட்சைகளுக்கும் தேர்வாளராக கடமையாற்றியும், சங்கீத சபையின் நிர்வாக அங்கத்தவராக விளங்கியும், கலைச்சேவைகள் பல புரிந்துள்ளார்.

இவரின் இசைச்சேவைக்காக இவருக்கு சங்கீதரத்தினம், கானவித்தியாபூஷணம், இசைப்புலவர், இசைச்சக்கரவர்த்தி, இசைமாமணி, இசைவேந்தர், கலைச்சுடர், கானவாரிதி, ஏழிசைக்குரிசில், என்னும் பட்டங்களையும் விருதுகளையும் பல இசை நிறுவனங்கள் வழங்கியமை குறிப்பிடக்கூடியதாகும்.

ஈழத்தில் பிறந்து ஈழத்தின் இசை மரபு வளர்ச்சிக்கு தொண்டாற்றிப் பெருமை தேடித்தந்த நம் இசைப்புலவர் சண்முகரத்தினம் அவர்கள் தனது 72ஆவது வயதில் 27-03-1987 இல் இவ்வுலகை விட்டுச்சென்றார். உடுவில் சண்முகரத்தினம், ஈழத்து இசைக்கலைவளர்ச்சியின் தவிர்க்கமுடியாத ஒரு முக்கிய மைல்கல் என்றால் மிகையாகாது.