அவளும் பாவம்…

பித்துப் பிடித்துப் போன அவள் பிம்பம்
மகிழ்ச்சியின் சிறகுகளை உடைத்தெறிகிறது.
நிழலை சந்தோசப் படுத்திப் பார்க்கிறாள்
நிஜம் பிணம் என்பதால் இயலவில்லை.
கண்ணீரால் கனவுக்கு மருந்திடுகிறாள்.
காயம் புதுப்பிக்கப்படுவதை 
இரத்தம் சாட்சி சொல்கிறது.

சித்திரம் கீறும் சிந்திப்பில்
அவள் உற்சவ தெய்வத்தின் 
அலங்காரத்தை அடையத் துடிக்கிறாள்.
பல கோடாரிக் காம்புகளால்
பாவப் பாடையை அலங்கரிக்கிறது
வைக்கோர் பட்டறையில் 
படுத்தபடி இந்த சமூகம்.

நிலவு இப்போது அவளுக்கு எரிகல்லாகிறது.
நட்சத்திரங்கள் குத்தும் நெரிஞ்சி முள்ளாகிறது.
பூக்களின் புன்னகை புரையேறி அடிக்கிறது.
பறவைகளின் பேச்சுச் சத்தம் – இப்போ
வில்லத்தனச் சிரிப்பாய் ஓங்கி இடிக்கிறது.

இயல்பிழந்த அவள் இதயத்தில்
இடம் மாறி இடம் மாறி எரிமலை வெடிப்பு.
சந்தோசக் கூடலில் கூட
சஞ்சலங்களின் சதங்கைச் சத்தம்.
தனிமைத் தாயின் தாலாட்டில் 
அவள் துயில் அகல் விளக்கானதை யாரறிவார்.

இலக்கணப் பிழைகள் கூட
அவள் வாழ்வின் இலக்கியமானது இப்போது.
பொங்கல் நாளில் அவள் முற்றத்தில்
பால் பொங்கிக் கிழக்கில் தான் சரிந்தது அப்போது.
எல்லாம் நடந்தது எப்படி முடிந்தது.

இஃதில்லை வாழ்வென்று 
பிணம் எரியும் புகை நுகரும்
மனதின் ஓங்காளிப்பு உவமை சொல்கிறது.
உண்மை என்று கடவுள் புன்னகைப்பதை
கவிஞன் மனம் எப்படிச் சொல்லி முடிப்பது….

கலைப்பரிதி.