அறிவுக்கும் உணர்வுக்கும் இடையிலான போட்டி ஒவ்வொரு கணத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அறிவுபூர்வமான காரியங்களுக்கும் உணர்வுபூர்வமான காரியங்களுக்குமிடையே ஒரு நீண்ட இடைவெளி
இருக்கிறது.அதனால்தான் அறிவுபூர்வமாக எடுக்கப்படும் முடிவுகளுக்கும் உணர்வுபூர்வமாக எடுக்கப்படும் முடிவுகளுக்கும் இடையே முரண்பாடுகளையும் நாம் காணமுடிகிறது.
முன்னரே ஏற்பட்ட அனுபவங்களே அறிவு பூர்வமாக ஒருவரைச் செயற்படத்தூண்டுகிறது.
அனுபவங்களின் வாயிலில் அப்போதுதான் வந்து நிற்பவனுக்கு அறிவுபூர்வமாகச் சிந்திக்க அவகாசம்
இருப்பதில்லை.உணர்வுபூர்வமாகவே அவன் செயற்படத் தயாராகிவிடுகிறான்.
முதியவர்கள் ஆலோசனைகள் சொல்வது அவர்கள் அறிவுபூர்வமாகச் சிந்திக்கிறார்கள் என்பதை
அர்த்தப்படுத்துகிறது.இளையவர்கள் எதைப்பற்றியும் சிந்திக்காமல் செயலாற்றுவது அவர்களது
உணர்ச்சித் துடிப்பை வெளிப்படுத்துகிறது.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பெரும்பாலான துயரங்கள் ஏன் ஏற்படுகின்றன என்றால் அவர்கள்
உணர்வுபூர்வமாகவே செயலாற்றுகிறார்கள் என்ற ஒரேயொரு காரணத்தால்தான்.
பந்தபாசங்களுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் மனிதன் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் வாழ
முடிவதில்லை. மற்றவர்களது உணர்வுகளை மதித்து இவன் தன் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்வதால்
பெரிதான பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றாலும்
உணர்வுகளில் புரிதல் இல்லாதபோது விபரீதங்களுக்கே அது வித்தாகிவிடுகிறது.
அன்பு பாசம் காதல் நட்பு என்று வகைப்படுத்தப்பட்ட அன்பின் உணர்வுகளும் பரிமாறிக்கொள்ளப்படும் விதத்தில் பரிமாறிக் கொள்ளப்படாதவிடத்து பாதகம் விளைந்து விடுகிறதே!
பலன்தரும் அதன் நிலையே இத்தகையது என்றால் ஏனைய தவறான உணர்வுகள் எத்தகைய தீங்கு
விளைவிக்கும் என்று சொல்லத் தேவையில்லை.