அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்டு நிறைவுவிழா:
யேர்மனி-ஒபகௌசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்டு நிறைவுவிழா கடந்த 09.11.2019 சனிக்கிழமை 15.30 மணிக்கு BERTHA-VON-SUTTER-GYMNASIUM, Bismarck Str.53, ஒபகௌசன் என்றமுகவரியில் அமைந்த மண்டபத்தில் பெற்றோரின் திருக்கரங்களால் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. மௌன வணக்கத்தோடு தொடர்ந்த நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தினை அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் மாணவிகள் இசைத்ததைத்தொடர்ந்து ஆசிர்யர்களும் மாணவர்களும் இணைந்து பாடசாலை கீதத்தினை இசையோடு பாடி மங்களகரமாக ஆரம்பித்துவைத்தனர். நிகழ்வுகளைப் பாடசாலையின் உயர்வகுப்பு மாணவிகளும் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் பழைய மாணவர்களில் ஒருவரும் தற்போதைய நிர்வாகச் செயலாளரும் ஆசிரியருமான திரு.விமலசேகரம் சபேசன் அவர்களும் சிறப்புறத் தொகுத்து வழங்கினார்கள்.
பாடசாலையின் நிர்வாகத் தலைவர் திரு.அம்பலவன்புவனேந்திரன் ஆசிரியர் அவர்கள் விழாவினுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்ற சிற்றுரையுடன் தனது தலைமையுரையினையும் சுருக்கமாக நிறைவுசெய்தார். தொடர்ந்து , சின்னஞ்சிறு மாணவர்களின் அ..ஆ.. (அகரவரிசை)பாடல், அறுசுவை பற்றிய பேச்சு, அ-ஆ சொல்வரிப்பாடல். அம்மாவைப்பற்றிய கதைப்பாடல் என்று தொடங்கி நல்ல பழக்கங்கள், திருக்குறள் பொருளுடனான உரை, அறிஞர் ம.மு.உவைஸ் அவர்கள் பற்றிய பேச்சு என்று மாணவர்களின் தனித் திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளினிடையே கல்வியாளர்கள், பிரமுகர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும. ் சமூகப்பணியாளர்களின் வாழ்த்துரைகளும் இடம்பெற்றன. சோஸ்ற் தமிழ்க்கல்விக் கலாச்சார அமைப்பைச்சேர்ந்த திருமதி.இந்து தெய்வேந்திரம, எழுத்தாளரும் தமிழ் ரைம்ஸ் பத்திரிகையின் துணையாசிரியருமான: திரு.கந்தையா சுப்ரமணியம். மற்றும் எழுத்தாளரும் யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளருமான: திருமதி. சந்திரகௌரி சிவபாலன் ஆசிரியை அவர்களும் வழங்கிய வாழ்த்துரைகள் விழாவினுக்கு உற்சாக பானங்களாக அமைந்தன.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தனராகக் கலந்துகொண்ட யேர்மனி- தமிழ்க்கல்விச் சேவையின் தலைவரும் டோட்முண்ட் வள்ளுவர் தமிழ்ப்பாடசாலையின் பொறுப்பாசிரியருமான தமிழ்மணி திரு. பொன்னுத்துரை சிறீஜீவகன் ஆசிரியர் அவர்களின் சிறப்புரையினையடுத்து அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் பழைய நிர்வாகத்தினர்களுக்கு திரு. பொன்னுத்துரை சிறீஜீவகன் அவர்களின் கரங்களால் மதிப்பளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து; யேர்மனி- தமிழ்க்கல்விச் சேவையின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்டுவிழாவினை பாராட்டி திரு. பொன்னுத்துரை சிறீஜீவகன் அவர்கள் வாழ்த்துமடல் ஒன்றினை வாசித்து ஆசிரியர்களிடம் கையளித்தார்.
நிகழ்வுகளின் வரிசையில் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்டு வரலாற்றுப்பதிவாக சுமார் 20 நிமிடங்களுக்குள்ளடங்கலான ஆவண-விவரணப் படம் திரையிடப்பட்டது. தொடர்ந்த நிகழ்வுகளில் கலகலப்பையும் உற்சாகத்தினையும் ஏற்படுத்திய, பாடசாலையின் ஹிப் ஹொப் மற்றும் பொலிவூட் நடன வகுப்பு மாணவர்களின் திரையிசைப்பாலுக்கான நடனங்களும் பாடசாலையின் உதவியாசிரியை திருமதி.கலைநிதி சபேசனின் நெறிப்படுத்தலில் திருக்குறள் இசைப் படல்களுக்கான நடனமும் கொலுசுக்கடை என்ற நடனங்களும் இடம்பெற்றன.
வாழ்த்துரைகளின் வரிசையில், அகரம் சஞ்சிகையின் பிரதமஆசிரியரும் ஈ.ரி.ஆர் வானொலியின் இயக்குநருமான திரு.தர்மலிங்கம் ரவீந்திரன் ஆசிரியர்அவர்களும்; மண் கலையிலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க ஆலோசகருமான திரு.வைரமுத்து சிவராசா அவர்களும்: எசன்-தமிழ் மொழிச்சேவை கலாச்சார மன்றத் தமிழ்ப்பாடசாலை நிர்வாகப் பொறுப்பாளரும் பிரபல வர்த்தகருமான திரு. சிவஅருள் அவர்களும் மாணவர்களின் திறமைகளை வியந்து பாராட்டி வாழ்த்திய உரைகளினூடாக மாணவர்கள் மனதிலும் இடம்பிடித்தனர்.
இடைவேளையினைத் தொடர்ந்த அடுத்தடுத்த நிகழ்வுகளாக பாடசாலையின் பழைய மாணவர்களின் கருத்துக்களையும் வாழ்த்தினையினையும் தொடர்ந்து வெற்றிமணிபத்திரிகை மற்றும் சிவத்தமிழ் சஞ்சிகையின் ஆசிரியருமான மு.க.சு.சிவகுமாரன் அவர்களின் வாழ்த்துரையும் இடம்பெற்றன. கௌரவ விருந்தினராகக் கலந்து நிகழ்வினைச்சிறப்பித்த கலைவிளக்கு சஞ்சிகையின் ஆசிரியரும் புலம்பெயர் பன்னாட்டு எழுத்தாளர் ஒன்றியத்தின் செயலாருமான திரு. சுப்ரமணியம்..பாக்கியநாதன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றதனையடுத்து பாடசாலை நிர்வாகத்தினர் அவருக்கான கௌரவத்தினை வழங்கிப் பெருமைப்படுத்தினர். இதனையடுத்து அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் மாணவர்கள் ஆசிரியர்களுக்கான தமது கௌரத்தினை வழங்கி மதிப்பளித்து மகிழ்ந்தனர்.தொடர்ந்த நிகழ்வுகளில் எசன்-தமிழ் மொழிச்சேவை கலாச்சார மன்றத் தமிழ்ப்பாடசாலை ஆசிரியை திருமதி.சாந்தினிதுரையரங்கள் அவர்களின் நெறியாழ்கையில் அமைந்த பாரம்ரீய நடனநிகழ்வுகள் மாணவர்களால் அரங்கேறியது. மேலும், பொதுப்பணிகளிலும் சமூகமேம்பாட்டிலும் தம்மை இணைத்துச் செயற்படுகின்ற அறுவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வினைத் தொடர்ந்து இதரமாணவர்களின் கலைத்திறன்கள் அரங்கினை அலங்கரித்தன. நிறைந்த வாழ்த்துரைகளில் ஒபகௌசன்-வருத்தப்படாத வாலிபர்சங்க உறுப்பினரும் எழுத்தாளருமான க.முருகதாசன் அவர்களின் வாழ்த்தும் இளம் படைப்பளிகளில் ஒருவரான செல்வன்.இராம் பரமானந்தனின் சிற்றுரையும் இடம்பிடித்தன.
மாணவர்களுக்கான கௌரவிப்பினை முன்னைநாள் பாடசாலை நிர்வாகிகளில் ஒருவரும் பாடசாலையில் தொடக்ககால ஆசிரியர்களில் ஒருவருமான திரு.துரைச்சாமி நந்தகுமார் ஆசிரியரின் கரங்களால் வழங்கப்பட்டது. தற்போதைய நிர்வாகச் செயலாளரும் ஆசிரியருமான திரு.விமலசேகரம் சபேசன் அவர்களும் பாடசாலையின் தொடக்க காலத்தில் இருந்த சூழ்நிலைகளையும் நிர்வாகத்தின் சிரமங்களையும் காலமாற்றங்களினால் எதிர்காலத்தின் நடைமுறைகளையும் விளக்கியதோடு காலத்தின் இன்றையதேவைகளும் தாய்மொழிக்கல்வியின் அவசியம் பற்றிய சிற்றுரையினை நிகழ்த்தினார். விழாவின் இறுதியில் ஆசிரியர் அம்பலவன்புவனேந்திரனின் நெறியாழ்கையில் உயர்வகுப்பு மாணவர்களால் தயாரித்து வழங்கப்பட்ட இடைவெளி என்ற 15 நிமிட நாடகம் இடம்பெற்றதனையடுத்து நன்றியுரையுடன் ஆண்டுவிழா 21.30 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.