அறிந்திருக்க நியாயமில்லை..கவிதை கவிஞர் ரதிமோகன்

ஏன் என்ற எதற்காக
என்ற கேள்விக்குள்
ஒளிந்திருக்கும்
விடைகளை நீ
அறிய முற்பட்டதுண்டா..

அறிந்திடவும் நீ
விரும்ப மாட்டாய்
நிலாவுக்கு அவளை
ஒப்பாகக் காணும்
உன் கண்கள்
உள்ளத்தைக்காண
எப்போதாவது
எத்தனித்ததுண்டா…

மலரே என அவளை
நீ சூடிக்கொள்ளலாம்
கசக்கி கூட எறியலாம்
உதிரும் மலரின்
ஒவ்வொரு இதழ்களிலும்
வேதனை இருப்பதை நீ
அறிந்திருக்க மாட்டாய்…

அவளின் செவ்விதழ்களில்
திராட்சை ரசமோ தேனோ
அருந்தி சுவைக்கலாம் நீ
அந்த இதழ்கள் உதிர்க்கும்
வார்த்தைகளை நீ என்றோ
எப்போதாவதோ ஒரு தடவை
செவிமடுத்ததுண்டா..,

உன் பார்வையில் அவள்
இன்னும் ஒரு சிறைக்கைதிதான்
ஒன்று மட்டும் உணர்ந்து கொள்
மலருக்கும் நிலாவுக்கும்
ஒருபோதும் அவளை
ஒப்பிட்டு கவி புனையாதே.,

அதனால்தான் என்னவோ
ஒரு நாள் மட்டும் சிரித்து
பலநாட்கள் அழுவதும்
தேய்வதும் வளர்வதுமாய்
அவள் போராடுவதை நீ
அறிந்திருக்க நியாயமில்லை..

விதியென்ற கோட்டிற்குள்
உரிமைக்காக கோடிட்ட
வெளிவராத எம் நூல்கள்
பக்கம் பக்கங்களாய்
எழுதப்பட்டும் இன்னும்
கண்ணீரினால்
அபிஷேகிக்கப்படுகின்றன…

ஆக்கம் ரதிமோகன்