அம்மாவும் அடுக்களையும்…!கவிதை சுபாரஞ்சன

அடுப்பங்கரையில்
அடிக்கட்டை விறகெரிந்து
அடுக்களைச் சூடு பரவும்

உறியிலே கறியும்
கரி பிடித்த பானையும்
மண்சட்டியும் மரஅகப்பையும்
மதியம் தாளித்த
அம்மாவின் கை மணமும்
வாசனை செய்யும்

ஆங்காங்கே
பலகைக் கட்டைகள்
வரவேற்றுக் கொள்ளும்
பந்தி போட…….

ஒட்டி உரசி ஒருமுறை வலம் வந்து
ஓரமாய் உட்காரும்
பூனைக்குட்டியும்
வாலையாட்டி
வாசலில் காத்திருக்கும் காவலனும்
எங்களோடுதான்

அட்டாளையில் கவிட்ட
பாத்திரங்களோடு பேசிக் கொண்டு
அந்த ஒற்றை வரி மட்டும்
உரக்கக் கேட்கும்
//சாப்பிட வாங்கோ//

குப்பி விளக்கில்
கூடி இருப்போம்
மார்கழி மங்கல் ஒளியில்
மனசு பிரகாசிக்கும் நினைவுகள்

சுபாரஞ்சன்.