உப்புக் கடலில் உருவாகும் நண்டதை
சப்பியே தின்றால் தனிச்சுவையே – அப்பு
மருந்தளிக்க ஊரிளுள மீனவர்கள் நண்டை
அருமருந்தைப் பெறவளிப்ப துண்டு .
அள்ளிவரும் நண்டை அடுப்பினிலே தீமூட்டி
உள்ளியொடு தூள்மிளகு உப்புமிட – தள்ளிநின்றே
பார்த்தன்று ரசித்தங்கே புசித்தோமே தாய்மனையில்
சேர்ந்திருந்த காலம் சிறப்பு .
எம்மனையின் வாசம் எதிர்வீட்டில் சேர்ந்துவிட்டால்
அம்மனைக்கே ஆசைவரு மன்றையநாள் – அம்மாவின்
நண்டுக் கறியென்றால் நாவூறும் யாவர்க்கும் !
உண்டு களிப்பார் உவந்து .
நனிசுவை கொண்டதாய் நண்டுக் கறியும்
தனிசுவையில் மீன்களைத் தள்ளும் ! – இனிதாய்
எலும்பின் வளர்ச்சியை ஏற்றமுறச் செய்யும் !
துலங்கிடும் தேகமது தான் .
நண்டு கரையில் நடனமிட நாரைகள்
கண்டதனைக் கவ்விடக் காத்திருக்கும் ! – மண்டுநீர்
ஆழத்தில் வாழு மதனையே கைப்பற்றி
வாழ்ந்திடும் மீனவர்கள் ஆங்கு .
இரா . சம்பந்தன் – ஜேர்மனி