அப்பாக்கள்….!

எப்பாடு
பட்டும்
தப்பாது
வளர்த்தெடுக்க
அப்பாக்களின்
சிலுவை சுமப்பு..

தப்பாகவே
கணித்து தப்பு
தப்பாகவே
பேசி நகர்ந்து
இடைவெளி
ஒன்றினால்
அன்னியமான பிள்ளைகள்..

தாமும்
தப்பாமல்
அப்பாவான
போதே விழிக்கின்றார்
அப்பாவின்
நியாயமதை..

ஆனாலும்
அந்நேரம்
அப்பாக்கள்
அனேகர் உயிரோடு
இருப்பதில்லை.
பிள்ளைகள்
இரப்பை நிரம்பிட
தம் இருப்பையே
கரைத்தவர் கனம்
யாருக்கும் புரிவதில்லை..

காலாவதியான
பண்டம் போல்
வேண்டாப் பண்டமாகி
அண்ட ஒருவரின்றி
தண்டிப் பிழைக்கும்
அப்பாக்கள் நிலையினை
யாரறிவார்…

குந்தக் குடிலின்றி
சொந்தப் பிள்ளைகள்
கை விட்டு நகர
நாதியற்று காப்பகத்தில்
தேடுவாரற்ற
மனிதப் பிண்டங்களாய்
நடமாடும் பிணங்களாய்…
வேண்டாம்.இதுக்கு மேலும்
வேண்டாம் விரல்களும்
நடுங்குகின்றன….

கலைஞர் தயாநிதி