நாம் அன்பு காட்டுபவர்கள், நம்மீது அன்பு காட்டுபவர்கள என்று இருவகை அன்பால்
இயங்குகிறது வாழ்க்கை!
நம்மீது அன்புகாட்டுபவர்கள் அனைவர்மீதும் நாம் அன்புகாட்டுகிறோமா என்றால் இல்லை என்பதுதான் விடையாக இருக்கிறது. அதுபோலவே நாம் அன்பு செய்கிறவர்கள் எல்லோருமே நம்மீது அன்பு காட்டுகிறார்களா என்றால் அதுவும் இல்லை என்பதே விடையாக இருக்கும்.
அன்பு என்பது இயற்கை உணர்வு. அது ஒவ்வொருவரிடத்தும் இயற்கையாகவே உறைந்து கிடக்கிறது.
நாம் ஒருவர்மீது அன்பு செய்யலாம் அல்லது பிறர் நம்மீது அன்புகாட்டலாம். இது இயற்கையாக நிகழவேண்டும்.
ஆனால் நாம் அன்பு செய்கிறோம் என்பதோ நாம் அன்பு செய்யப்படுகிறோம் என்பதோ நம்மால் அறியப்படாததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அது முழுமையானதாக இருக்க முடியும்.
அன்பு புனிதமானது பூரணத்துவமானது. அதை முழுமையாக வெளிக்காட்டுவதென்பது இயலாதது.
அன்பின் வெளிப்பாடான காரியங்கள்தாம் வாழ்வை முழுமைப்படுத்துகின்றன எனபது உண்மைதான்.
இது அன்பின் விளைவானது என்று அறியப் படாதவரைக்கும்தான் அந்தக் காரியங்களுக்கும் மதிப்பிருக்க முடியும்.
இது அன்பின் விளைவு என்று அறியப்படும்போது எதிர்பார்ப்புக்களும் உருவாகிவிடுகின்றன.
எதிர்பார்ப்புக்கள் முழுமையுறாதபோது அன்பும் அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது.
இவன்மீது – இவள்மீது- இத்தனை அன்பு வைத்திருந்தேனே.. ஆனால் இவ்வளவும்தானா இவன் – இவள்? என்ற வினா அன்பின் அளவுகோல் அல்ல. அது எதிர்பார்ப்புக்களின் அளவுகோல்.
இதையே அன்பின் அளவுகோலாய்ப ற்றிக்கொள்ளும்போது அன்பு என்பதும் அர்த்தமிழந்ததாகி விடுகிறது.
நம்மைப் படைத்துக் காத்து அழித்து மறைத்து அருளும் சக்தி என்பதே இறைவன் என்று கொண்டாடுகிறோம் நாம்.
கண்டறியாத இறைவன் மீது பற்றுக்கொள்கிறோம் பக்தி செய்கிறோம்.
நமக்கு உள்ளேயும் வெளியேயும் அவன் உறைந்திருக்கின்றான் என்ற உறுதியான நம்பிக்கையோடு அவனை வடிவமைக்கிறோம் வழிபடுகிறோம்.
முக்திநெறி அறியாத மூடரெனத் தெரிபவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, பக்தியால் நாம் அவனைப்
பலகாலும் பற்றியே திருபு;புகழ்பாடி முக்தனாய் மாறிட முயல்கின்றோம்.
பக்திவழி செல்கிறோம் என்பது சரி. ஆனால் நாம் பக்திசெய்கிறோம் என்பது நமக்குத் தெரியக்கூடாது.
அவ்வாறு தெரிந்துகொண்டுவிட்டால் அது பக்தியும் அல்ல.
நான் எவ்வளவு அன்புசெய்கிறேன். ஆனால் கண்கெட்ட கடவுள் என்மீது கருணை காட்டவில்லையே! என்று இறைவனுக்கே சாபம் கொடுக்கும் நிலைக்கு ஒருவர் வருகிறார் என்றால் அவரது அன்பு முழுமையானது அல்ல என்பதே அர்த்தம்.
எது எது எப்போது நிகழவேண்டுமோ அது அது அப்போது நிகழும் என்பது இயற்கை விதி.
இது ஏற்கனவே இயற்கையின்மூலம் இறைவன் எழுதிவிவைத்த விதி.
இதை எவராலும் மாற்றுவதற்கு இயலாது.
விதி என்று எதுவுமில்லை என்பவர்களும் இந்த விதிக்குள் அடக்கம் என்பதே விதி.
அன்பே சிவம் என்று அவனையே பற்றிநின்றேனே என்விதி இப்படி ஆயிற்றே என்று எவரும் புலம்பத் தேவையில்லை.
அன்பும் சிவமும் இரண்டல்ல என்பதும் அன்பே சிவமாய் அடங்கியிருத்தலும் இயல்பானது இயற்கையானது.
அன்பு என்பதே தெய்வமானது என்ற உண்மையை உணர்ந்துவிட்டால் போதுமானது.
நாம் அன்புக்காக ஏங்கவேண்டியதில்லை. நாம் அன்புசெய்கிறோம் என்று மயங்கவேண்டியதுமில்லை.