நாடுகடந்துவந்து
ஊரை நினைத்து
உறவை நினைத்து
பாசங்களை நினைத்து
உருகினோம் தவித்தோம்
பாசத்துக்காக ஏங்கினோம்
வெள்ளைக்காரன் நாட்டிலே
புரியாதபாஷையோடு
அடுப்பிலே நின்றும்
மேசை கதிரை நிலம் கழுவித்துடைத்தும்
வெந்துநொந்து வேகினோம்
வேதனையில் வாடினோம்
கடும்குளிரில் கைகுத்தும் உடல்நடுங்கும் வெய்யில் சுட்டெரிக்கும்
ஆனாலும் பாசத்தை நினைத்து
பலலட்சம் பணம் அனுப்பினோம்
அக்கா,தங்கைக்கு சீதணக்காசும்
வீடும் கட்டிக்கொடுத்தோம்
சிலர் வெளிநாட்டுக்கு கூப்பிட்டோம்,வெளிநாடு வரவும் உதவிகளும் செய்தோம்
பாசக்காரத்தம்பி அண்ணன் என்று
அன்பொழுகப்பேசிவிட்டு
வாங்குமட்டும் வாங்கிவிட்டு
தங்கள் காரியம் முடிந்தபின்
இப்ப என்ன தந்தனீங்கள்
என்று கேட்டதை
நினைக்கவே கவலையாப்போச்சு
அங்கு என்ன நடக்குதெண்டு
தெரியாமல் ஏமாந்துபோனோம்
பாசங்களை நம்பி மோசம்போட்டம்
கட்டுச்சோறும் மின்விசிறிக்காற்றில்
கட்டில் படுக்கையும்
கிடாய் அடிப்பும் போத்திலும்
மோட்டச்சைக்கிளும்
வீட்டு வேலைக்கு சமையல்க்காரியும்
இப்படி நடக்குதையோ
போனவை பாத்துவந்து சொன்னதும் கோபம் வந்தது
ஊரும்வேண்டாம் உறவும்வேண்டாம்
என்று மனம் கல்லாப்போச்சுது
வெளிநாட்டில் நிற்ப்பவர்கள் பாசத்துக்காக ஏங்குகின்றார்கள்
ஊரில் இருப்பவர்கள் பணத்துக்காக பழகுகின்றார்கள்
புரிந்தது சில சனியனுகளின் வெளிவேஷமும் சுத்துமாத்தும்
அள்ளுவாரோடை இருந்தாலும்
கிள்ளுவாரோடை இருக்கேலாது
வெளிநாட்டில் இருந்து ஊருக்குப்போனால்
சொந்தபந்தம் வந்தால் பத்தாயிரம் ரூபாப்படி கொடுக்கவேணுமாம்
குறைச்சுக்கொடுத்தால்
வாங்கமாட்டினமாம்
வெளிநாட்டுக்கு வருவதற்க்கு
அவையோ காசுகட்டி அனுப்பினது
என்ன நடக்குது போறவர்களிடம்
காசு வாங்கி சொகுசாக
வாழ்ந்து பழகியாச்சு
இவர்களுக்கு கொடுப்பது பாவம்
கஷ்டப்பட்டவர்களுக்கு கொடுப்பது தர்மம்
பாவத்தை தேடாமல் தர்மத்தை தேடுவோம்
உறவால் ஏமாந்ததும்
இழந்ததும் அதிகமே
(மயிலங்காடுஇந்திரன்)