அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்தில் இருமாடிக் கட்டிடடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலையில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் இரண்டுமாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 15.07.2017 சனிக்கிழமை அதிபர் ஸ்ரீரதி முருகசோதி தலைமையில் நடைபெற்றது.
.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் கலந்து கொண்டார். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) சு.முரளிதரன், வலிகாம் கிழக்கு பிரதேச செயலர் சுபாஜினி மதியழகன், யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் ந.தெய்வேந்திரராஜா, வண தா.மகாதேவக் குருக்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் (ONUR – Office for National Unity and Reconciliation) வழங்கப்படும் நிதியுதவியில் 70 அடி நீளம் கொண்டதாகவும் 25 அடி அகலமுடையதாகவும் இரண்டு மாடிகள் கொண்டதாக இந்தக் கட்டடம் அமைக்கப்படவிருக்கின்றது.
.
இப்பாடசாலை அச்சுவேலியைச் சேர்ந்த அமரர் சிவாகமஞானபானு ச.குமாரசுவாமிக் குருக்களால் 1918 ஆம் ஆண்டு பங்குனி மாதப் புனர்பூச நட்சத்திரத்தில் அமைக்கப்பட்ட பழைமை மிக்க பாடசாலை ஆகும். அடுத்த ஆண்டில் இதே நட்சத்திர நாளில் நூற்றாண்டு விழாவை முன்னெடுக்க வேண்டுமென பாடசாலைச் சமூகத்தினர் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.