அகதி

என் வீட்டு முற்றம் இழந்தேன்
அகதிப் பயணம் ஆரம்பம்.
எட்டி வைத்த அடிகளெல்லாம்
பல திசையின் பிரசவம்.
கிழிந்த இறகுகளால்
ஒரு பரிதாபப் பறப்பு.
அழிந்த தடங்களைக் கடந்து
முகவரி இல்லாத பிறப்பு.

என்னை ஓங்கிக் குத்தியது
பல மொழிச் சொற்கள்.
என்னைக் காயப்படுத்தியது
பல மனக் கற்கள்.
எத்தனை சூரியன்கள் உதித்தாலும்
என் வானத்தில் உதயம் இல்லை.
எத்தனை சுரங்கள் இணைத்தாலும்
என் பாடலில் சுகந்தம் இல்லை.

பணிவுகளும் குனிவுகளும் 
என்னை வென்றதாய் 
எனக்குள் ஒரு வெட்டிச் சரிதம்.
ஆடைகளால் மூடிக் கொண்டு 
அழகுற நடந்தாலும்,
அகதி என்ற சொல் என்னை 
அம்மணமாக்கிறது.
ஒரு பணச் சூரியனின் உதயத்தை
என் ஆகாயத்திலும் கண்டேன்.
அடிமாடாய் நடந்து நான் சேர்த்தது.
அகதியாய்க் கருகி நான் பூத்தது.

பார்வைக்கு நான் ஒளி
என் உருகுதலின் வலி
மெழுகுவர்த்திக்கு மட்டுமே தெரியும்.
அது என் வாழ்நாள் விம்பம் அதனால்
என் பக்கங்களைப் புரட்டி
ஆத்ம மன்றம் ஆய்வு செய்தது
சிறந்த அகதி யாரென்று.
தமிழன் என்ற பெயரோடு
நான் தான் முதலிடத்தில்…
இன்றும் அகதிக் கால்களோடு
என் பயணம் நீள்கிறது
புதுப் புதுத் திசைகளைத் தேடியபடி….

கலைப்பரிதி