எழுத்தை விதையாக்கி இனிதாய் தூவிடவே
உழுத வயலாகிக் – கிளியே
உள்ளம் நெகிழாதோ ?
இனிமை தவழ்ந்துவர எழுச்சி மிகுந்துவர
மனிதம் துளிர்த்துவரக் – கிளியே
மண்ணும் செழிப்புறுமே !
உடைமை யிழந்தவர்கள் உரிமை கேட்கையிலே
தடைகள் விதித்திடுவார் – கிளியே
மடமைக் குணமுடையார் !
புதையும் கலாச்சாரம் போதை யதனாலே
இதய மற்றவரால் ! – கிளியே
இதனைத் தடுத்திடுவோம் .
இளைய சமுதாய மிதனால் பாழாகும்
களைகள் போன்றவரால் ! – கிளியே
கலக்க மடைந்தோமே !
நடைகள் மாறியங்கே நாணம் துறந்தவர்கள்
உடைகள் களைவாரே – கிளியே
உதைத்தே நிமிர்ந்திடுவோம் .
இனத்தின் நலம்பேணா தின்னா செய்பவர்கள்
வனத்தின் விலங்குகளாய்க் – கிளியே
வன்மம் மிகுந்தவராய் . . . .
புதுமை முகிழ்த்துவரப் புரட்சி நிகழ்ந்துவிட
பொதுமை மலர்ந்துவரக் – கிளியே
புவனம் மகிழ்வுறுமே .
இரா . சம்பந்தன் – ஜேர்மனி